யாழ்ப்பாண தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு - எம்மைப் பாதிக்கும் எனவும் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

யாழ்ப்பாண தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு - எம்மைப் பாதிக்கும் எனவும் விளக்கம்

யாழ்ப்பாண தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென, யாழ். மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், கலந்துரையாடும் சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில், நேற்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இதையடுத்து ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

யாழ் மாவட்ட மீனவ சம்மேளன பிரதிநிதி வர்ணகுலசிங்கம் தெரிவித்ததாவது யாழ் மாவட்டத்திலுள்ள தீவகங்களில் மூன்று தீவுகளை, மின்சார உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன. இதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

சீனாவுக்கோ அல்லது இந்தியாவுக்கோ எதற்கு வழங்கினாலும் நாம் எதிர்ப்போம். வெளிநாடுகளின் ஆதிக்கத்துக்கே இது வழியேற்படுத்தும். இதனால் எமது மீனவர்களே வறுமைக்குள் தள்ளப்படுவர். 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இப்போதே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு இத்தீவுகள் வழங்கப்பட்டால் நிலைமைகளை எண்ணிப் பார்க்கவே முடியாதிருக்கும். எனவே உள்நாட்டு வளங்களைப் பாதுகாத்து மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிப்பது பற்றியே சிந்திக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ சமூக பிரதிநிதி, அன்னராசா யாழ், மாவட்டத்தின் தீவகங்களை சீனாவின் நிறுவனத்திற்கு வழங்க முயற்சிக்கப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது. 

 நாங்கள் சுதந்திரமாக தொழிலை செய்து நிம்மதியாக வாழக் கூடிய வகையில், ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்ககை எடுப்பது அவசியம். உள்நாட்டு மீனவர்களின் நலன்கள் பற்றியே அரசாங்கம் சிந்திக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி நிருபர்

No comments:

Post a Comment