மட்டக்களப்பில் அரச காணி வழங்கலில் பராபட்சம் - முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் முற்றாகப் புறக்கணிப்பட்டுள்ளனர், அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுபைர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

மட்டக்களப்பில் அரச காணி வழங்கலில் பராபட்சம் - முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் முற்றாகப் புறக்கணிப்பட்டுள்ளனர், அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுபைர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பில் அரச காணி வழங்கலில் முஸ்லிம் சிங்கள ஊடகவியலாளர்கள் முற்றாகப் புறக்கணிப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் திட்டமிட்ட செயல்பாடு என்பதால் இந்த விடயத்தில் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஏறாவூர் நகர சபையின் உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் புதன்கிழமை 24.03.2021 ஜனாதிபதிக்கு அவசர மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஊடகவியலாளர்கள் கடந்த யுத்த காலத்திலும் சரி தற்போதைய காலகட்டத்திலும் சரி மக்களின் நடப்பு விவகாரங்களை வெளிக்கொண்டு வந்து குரலற்ற மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர்கள்.

அதேவேளை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இணைப்புப் பாலமாகவும் அவர்கள் எப்போதும் இருந்து வருபவர்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிலையான இன ஐக்கியத்திற்காகவும் இந்த நாட்டுக்காகவும் அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ப்பணிப்போடு பணியாற்றும் இத்தகைய ஊடகவியலாளர்களின் பணியை எவரும் இனம் மதம் என்ற நோக்கில் குறைத்து மதிப்பிட்டு புறந்தள்ளலாகாது.

ஆயினும் இந்த புறக்கணிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிப்படையாக இடம்பெற்றிருப்பது வியப்பை அளிக்கிறது.

மட்டக்களப்பில் கடந்த வாரம் 33 தமிழ் சமூக ஊடகவியலாளர்கள் என்று கூறப்படுகின்றவர்களை மாத்திரம் தெரிவு செய்து அரச அதிகாரிகளும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரும் கலந்துகொண்ட அரச நிகழ்வொன்றில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதில் காத்தான்குடி ஏறாவூர் கல்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஊடவியலாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிங்கள ஊடகவியலாளர்களும் வேறு சமூகம் என்ற அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் வதிவிடக் காணி இல்லாத ஊடகவியலாளர்களுக்கு அரச காணி வழங்கும் நேர்முகப் பரீட்சைக்கு ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தபோதும் அதிலிருந்து முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு தமிழ் சமூக ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அரச காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே இனம் மதம் சமூகம் என்ற அடிப்படையில் பிரித்து நோக்கி அரச நிருவாகத்தின் மூலம் பேதங்களை வளர்க்காது காணி வழங்கப்படாமல் விடுபட்டிருக்கின்ற முஸ்லிம் சிங்கள ஊடகவியலாளர்களையும் மேலும் பல்வேறுபட்ட அரசியல் பின்னணிகளைக் கருத்திற்கொண்டு மாவட்டத்தில் காணி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற ஏனைய தமிழ் ஊடவியலாளர்களுக்கும் உடனடியாகக் காணி வழங்க வேண்டும்.

இத்தகைய ஒரு தீர்மானத்தை ஏறாவூர் நகர சபை அங்கீகரித்துள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி பிரதமர் ஊடக காணி அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் உடனடிக் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவட்டத்தில் கடந்த காலங்களைப் போன்று இத்தகைய இன மத அநீதி அரசாங்க நிருவாகத்திற்கூடாக இனிவரும் காலங்களிலும் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் கரிசனையாக உள்ளோம்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமையன்று 19.03.2021 இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற அரச காணிகள் வழங்கும் நிகழ்வில் காணிக்குப் பொறுப்பான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் அந்த ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment