ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஏன் தோல்வியடைந்தது - காரணத்தை கூறுகிறது ஐக்கிய மக்கள் சக்தி - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஏன் தோல்வியடைந்தது - காரணத்தை கூறுகிறது ஐக்கிய மக்கள் சக்தி

(நா.தனுஜா)

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அவற்றுக்கு மதிப்பளிப்பதிலும் அரசாங்கம் தோல்வியடைந்தமையின் நேரடி விளைவாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையைக் கருத முடியும். கடந்த காலத்தில் இலங்கையை ஆதரித்த நாடுகள்கூட தற்போது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமைக்கு, மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளே பிரதான காரணமாகும். இத்தகைய செயற்பாடுகள் இலங்கையின் மீது சர்வதேசத்தின் அழுத்தம் மேலும் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல்' என்ற பிரேரணை நேற்றுமுன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை நாம் ஆதரிக்கின்றோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் மூன்று தசாப்தகாலப்போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டமை நாட்டின் வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பெருமளவானோர் அவர்களது உயிர்களைத் தியாகம் செய்தனர். 

இந்நிலையில் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, சுயாதீனத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் ஒருமித்த நாட்டிற்குள் உயர் அதிகாரப் பரவலை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதிலும் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம். 

எனினும் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரி செய்வதன் ஊடாக நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் ஊடாகவே நிறைபேறான சமாதானத்தை அடைந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளின் நேரடி விளைவாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையைக் கருத முடியும். 

குறிப்பாக வெளிவிவகாரக் கொள்கைகளில் அரசாங்கத்தின் தோல்வியையும் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள தோல்வியையும் அது வெளிப்படுத்துகின்றது. பகுத்தறிவற்ற முறையிலேயே தற்போதைய அரசாங்கம் வெளிவிவகாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி, சர்வதேச சமூகத்தைத் இராஜதந்திர ரீதியில் திருப்திப்படுத்தக் கூடிய விதத்தில் செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் முறையற்ற பிரசாரங்களையே மேற்கொண்டு வந்திருக்கிறது. 

மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முறையில் சர்வதேச சமூகத்தைக் கையாளும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் சரிவரச் செயற்படவில்லை. 

இந்த மந்தகரமான நடவடிக்கைகள் கடந்த காலத்தில் இலங்கையை ஆதரித்த நாடுகள் கூட தற்போது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமைக்குப் பிரதான காரணமாகும். இந்நிலையில் வெளிவிவகாரக் கொள்கைகளைக் கையாள்வதற்கு இலங்கை புதியதும் சரியானதுமான முறையொன்றைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

அதேவேளை தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் தோல்வியடைந்தமையே மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அதனைத் தெளிவாக நிரூபிக்கின்றன. நாட்டில் மிகவும் மோசமடைந்திருக்கும் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் அரசாங்கத்தின் இனவாத, ஒடுக்குமுறைக் கொள்கைகள் ஆகியவற்றை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதுமாத்திமன்றி ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் கண்டனம் செய்கின்றோம்.

குறிப்பாக அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் இலக்கு வைக்கப்படுவதுடன் மக்களின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. 

அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அவர்களின் அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளுக்காகத் தண்டிக்கப்படுகின்றனர். 

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இலக்குவைக்கப்படுவதுடன் அவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியதாவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நிலையில் நாட்டில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கு வலுவான பொறிமுறையொன்று அவசியமாகும். மனித உரிமைகளை மதிக்கும் வகையில் இலங்கை செயற்படுமாக இருந்தால், அது நிச்சயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடங்க வேண்டிய தேவையிருக்காது.

எனவே சர்வதேச ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும் சுயாதீனமானதுமான உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நாம் ஆதரிக்கின்றோம். 

கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு என்வற்றின் அறிக்கைகள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவை விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றன. 

அதேவேளை நாட்டில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும் தற்போதைய அரசாங்கம் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வரவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும். 

இத்தகைய செயற்பாடுகள் இலங்கையின் மீது சர்வதேசத்தின் அழுத்தம் மேலும் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad