சீன மற்றும் தென்னாபிரிக்க பொலிஸார் பல டஸின் போலி கொவிட்-19 தடுப்பு மருந்துகளை பறிமுதல் செய்திருப்பதோடு பலரையும் கைது செய்துள்ளனர். இந்தத் தகவலை சர்வதேச பொலிஸான இன்டர்போல் வெளியிட்டுள்ளது.
தொழிற்சாலை ஒன்றில் போலி தடுப்பூசி தயாரித்த குற்றச்சாட்டில் சீன பொலிஸார் 80 பேரை கைது செய்துள்ளனர். அங்கு குறைந்தது 3,000 டோஸ் போலித் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று தென்னாபிரிக்காவின் கவ்டெங் பகுதியில் இருக்கும் களஞ்சியம் ஒன்றில் வைத்து மூன்று சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு சிம்பாப்வே நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 2,400 போலித் தடுப்பு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கைகள் எப்போது இடம்பெற்றது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. எனினும் கடந்த டிசம்பர் இறுதியில் தென்னாபிரிக்காவில் இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஏனைய போலி தடுப்பு மருந்து குற்றச் செயல்கள் குறித்த விபரங்களும் கிடைக்கப் பெற்றிருப்பதாக இன்டர்போல் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பு என்பதன் சுருக்கமான இன்டர்போல் பிரான்சின் லியோன் நகரைத் தளமாகக் கொண்டு செயற்படுகிறது.
பொலிஸ் படைகள் மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு இந்த அமைப்பு உதவுகிறது.
அங்கீகரிக்கப்படாத தடுப்பு மருந்துகள் இணைய விற்பனைக்காக தற்போது கிடைக்கப் பெறுகிறது என்று இன்டர்போல் தெரிவித்துள்ளது.
“இணையத்தளம் அல்லது டார்க் வெப்பில் விளம்பரம் செய்யப்படுகின்ற எந்த ஒரு தடுப்பூசியும் சட்டபூர்வமானது அல்ல என்பதோடு அது சோதனைக்கு உட்படுத்தப்படாதது. அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்து தீர்க்கமாக உள்ளதோடு தற்போது கிடைக்கப்பெறும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை பெறுவதில் சர்வதேச அளவில் போட்டி நிலவி வருகிறது.
No comments:
Post a Comment