இல்மனைட் அகழ்வுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவா திருக்கோவிலில் இராணுவ முகாம்கள் - கல்வியில் ஏன் எமது சமூகத்துக்கு புறக்கணிப்பு? : கலையரசன் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

இல்மனைட் அகழ்வுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவா திருக்கோவிலில் இராணுவ முகாம்கள் - கல்வியில் ஏன் எமது சமூகத்துக்கு புறக்கணிப்பு? : கலையரசன் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள இல்மனைட் அகழ்வுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவா அப்பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. கலையரசன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுங்கக் கட்டளை சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

கலையரசன் மேலும் பேசுகையில், கிழக்கு மாகாணத்திலிருந்து பல கைத்தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆசியக் கண்டத்திலேயே பெயர்போன சவளக்கடை அரிசிஆலை இன்று இருந்த இடமே இல்லாதுள்ளது. நாம் எத்தனையோ கோரிக்கைகளை விடுத்தபோதும் அந்த பகுதியை அபிவிருத்தி செய்யும் நோக்கம் எவருக்குமே இல்லை. 

68 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை கொண்ட கட்டிடங்கள் இருந்தன. அங்கு அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி காலி, அம்பாந்தோட்டை உள்ளீட்டை ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்கள் வந்து அரிசிகளை கொள்வனவு செய்தனர்.

அதுமட்டுமன்றி கடலை அண்டிய கப்பற்போக்குவரத்தும் இருந்துள்ளது. அவ்வாறான பிரபலமான அரிசி ஆலை அழிக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் அது புனரமைக்கப்படவில்லை. இந்த நடைமுறை தொடர்ச்சியாக இருக்குமானால் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற முடியாது.

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட உவெஸ்லி உயர்தர பாடசாலையானது ஒரு வன் ஏ பி பாடசாலையாகும். அங்கு 2000 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இதன் அடிப்படையில் 2020-06-05 ஆம் திகதி கல்வி அமைச்சு செயலாளரினால் இந்தப் பாடசாலைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு தொழில்நுட்ப கூடம் அமைப்பதற்கான கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.

அதற்கமைவாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பணிப்பாளரின் அனுமதியோடு கட்டடம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தவேளை வலயக் கல்விப் பணிமணியின் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள், பொறியியலாளர்கள் அங்கு சென்று அந்த இடத்தை பார்வையிட்டு அங்கு இருந்த 60 வருட பழைமையான கட்டிடத்தை அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்தனர். அதற்கான அனுமதியை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வழங்கினார். கட்டிடமும் அகற்றப்பட்டது.

ஆனால் இப்போது அங்கு அமைக்கப்படவிருந்த கட்டிடம் வேறு எங்கோ அமைக்கப்படுவதாக நாம் அறிகின்றோம். இதனால் இப்போது 5 வகுப்பறைகளைக் கொண்ட பழைய கட்டிடமும் அங்கு இல்லாததனால் மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியில் ஏன் எமது சமூகத்துக்கு இவ்வாறான புறக்கணிப்பு?

யுத்தத்தினால் அழிவடைந்த வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கின்றது. சோமாலியா நாடு போன்றதொரு நிலைமையை வடக்கு, கிழக்கில் ஏற்படுத்தும் முனைப்புக்களிலேயே அரசு ஈடுபட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை மையமாக வைத்து இல்மனைட் அகழ்வு என்ற அடிப்படையில் சூழலுக்கு, மனித குலத்துக்கு எதிரான விடயங்களை அரசு கையாளுகின்றது. இதுபோன்று திருக்கோவில் பிரதேசத்தை மையமாக வைத்து இல்மனைட் அகழ்வு செய்வதற்கான முன்முனைப்புக்கள் இடம்பெறுகின்றன.

இதற்கு எமது மக்கள் நீண்ட காலமாக எதிர்ப்புக்களை தெரிவித்து வந்துள்ளனர். பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு செய்வதில்லை என்ற ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் இல்மனைட் அகழ்வுக்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அதுமட்டுமன்றி திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. யுத்தம் இல்லாத சூழலில் ஏன் புதிய இராணுவ முகாம்கள்? இல்மனைட் அகழ்வுக்கு பாதுகாப்பு கொடுக்கவா இந்த புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகினறன ? 

31000 மக்கள் வாழ்கின்ற திருக்கோவில் பிரதேசத்தில் 40 ஆம் கட்டைப் பகுதியில் அதாவது திருக்கோவில் ஆரம்பிக்கின்ற பகுதியில் ஒரு இராணுவ முகாம், கஞ்சிகுடியாற்றில் ஒரு இராணுவ முகாம், தம்புலுவிலில் ஒரு பாதுகாப்பு அரண், சாகாமத்தில் ஒரு இராணுவ முகாம், என அமைக்கப்பட்டுள்ளன.

எமது மக்களுக்கு அபைவிருத்திகளை செய்ய வேண்டிய இந்த காலகட்டத்தில் இவ்வாறான இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் நோக்கமென்ன? நாம் இந்த நாட்டில் அழிவை சந்தித்து வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் இவ்வாறான இராணுவ முகாம்கள் எமக்கு தேவையா? பாடசாலையில் கூட இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரைக்கும் நடந்த எங்களது பேரணி தொடர்பில் எங்களை தொடர்ச்சியாக இராணுவத்தினரும் பொலிஸாரும் வீடுகளுக்கு வருவதும் விசாரணை செய்வதும் என எங்களை துன்புறுத்துகின்றனர்.

ஜனநாயகத்தை விரும்பாதவர்களே எங்களை அடக்கி ஆழ விரும்புகின்றார்கள். நாங்களும் மக்கள் பிரதிநிதிகள். எங்களுக்கென சில கௌரவங்கள் உள்ளன. அவற்றை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த சபையில் கோருகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad