ஒரு வருடமாக இழுபறியிலிருந்த நல்லடக்க விவகாரம் இன்றுடன் முடிவுக்கு வந்தது - கண்கலங்கியவாறு தெரிவித்தார் ஹாபிஸ் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

ஒரு வருடமாக இழுபறியிலிருந்த நல்லடக்க விவகாரம் இன்றுடன் முடிவுக்கு வந்தது - கண்கலங்கியவாறு தெரிவித்தார் ஹாபிஸ் நஸீர் அஹமட்

கொரோனாத் தொற்றில் உயிரிழந்த, ஏறாவூரைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை, ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. 

பெப்ரவரி (27) இல் மரணித்த உதவிப் பணிப்பாளர் கலீல் மற்றும் மார்ச் (03) இல் மரணித்த ஹஸனதும்மா ஆகியோரின் ஜனாஸாக்களே இன்று (வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் நல்லடக்கம் செய்யப்பட்டன. 

இவர்களது ஜனாஸாக்கள் இதுவரையும் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் கொழும்பு ஐ,டி,எச் வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரணை தீவில் அடக்கம் செய்வதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட், ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, ஏறாவூரைச் சேர்ந்த இந்த ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. 

சுமார் ஒரு வருடமாக இழுபறியிலிருந்த, நல்லடக்க விவகாரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் கண்கலங்கியவாறு தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றில் உயிரிழந்து, முதலாவதாக நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தனது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்து, ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு சிறந்த முன்மாதிரியாக இவர், செயற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 

சுகாதார அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர், இன்று (05.03.2020) அதிகாலை 05.48 மணியளவில், கொழும்பு ஐ,டி,எச் வைத்தியசாலைக்குச் சென்று ஹஸனதும்மாவின் ஜனாஸாவை வாகனத்தில் ஏற்றியவாறு இராணுவத்தின் முழு உதவியுடன் குருநாகல் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த உதவிப் பணிப்பாளர் கலீலின் ஜனாஸாவையும் ஏற்றிக் கொண்டு, பலத்த பாதுகாப்புக்களுடன் சென்ற பாராளுமன்ற உறுப்பினர், சூடுபத்தின சேனையில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, சுமார் 03.20 மணியளவில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. 

இதற்கு உதவிய இறைவனைப் புகழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தனது டுவிட்டர் பக்கத்திலும், அபிலாஷைகள் அர்த்தமாகின அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒரு வருட காலமாக கொரோனாவில் மரணித்த ஜனாசாக்களின் நல்லடக்கத்திற்காக பாடுபட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், அனைத்து மதப் பெரியார்கள், சிவில் சமூகத்தினர், வெளிநாடுகளில் வாழும் உறவுகள் மற்றும் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் ஹாபிஸ் நசீர் எம்.பி இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்தனை புரிவதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் எம்பிக்கள், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஓட்டமாவடி, பொத்துவில், திருகோணமலை, இறக்காமம், சம்மாந்துறை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களைப் பரிந்துரைத்து 2020.12.03 ஆம் திகதியன்று எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். 

மேலும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின், நிலக் கீழ் நீர் பற்றிய ஆய்வறிக்கையும் குறித்த இவ்விடயங்களில் ஜனாஸாக்களை அடக்குவதால், எவ்வித ஆபத்துக்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment