ராஜபக்ஷ அரசை மிக மோசமாக விமர்சித்து மக்கள் வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமதை, அவர் 20 க்கு ஆதரித்தமைக்காக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக நியமித்ததன் மூலம் ராஜபக்ஷ அரசாங்கம், நன்றியுள்ள, எதிரியையும் மதிக்கும் அரசாங்கமாக உள்ளதாக உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 2019 ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பகிரங்கமாக முதலில் இணைந்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும். ஆனாலும் அரசு எமக்கு எந்த உதவிகளும் இன்று வரை செய்யாத நிலையில் தம்மை மிக கேவலமாக ஏசி, முஸ்லிம்களை உசுப்பேற்றி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவராக நியமித்ததன் மூலம் அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை கௌரவித்துள்ளது.
கடந்த 2005 முதல் உலமா கட்சி மஹிந்த தரப்புடன் இருந்தும் அக்கட்சிக்கு அரசு எந்தவொரு பதவியோ, தொழில் வாய்ப்புக்களோ கொடுக்காத நிலையிலும் இன்று வரை ராஜபக்ஷாக்களுடனேயே இருக்கிறது.
எமக்கு கிடைக்கவில்லையே என்பதற்காக நாம் வெளியே சென்று மக்களிடம் அரசை ஏசியிருந்தால் நிச்சயம் முஸ்லிம் சமூகம் எமக்கு ஆயிரக்கனக்கில் வாக்களித்திருக்கும். ஆனாலும் நாம் அப்படிப்பட்ட கேவலமான அரசியலை செய்யாமல் எப்போதும் உண்மையான, நேர்மையான அரசியலையே செய்தோம். எம்மை விட நாம் இந்த நாட்டின் நலவையே நேசித்தோம்.
அந்த வகையில் நாமும் ஆட்சியை கொண்டு வந்த பங்காளி கட்சி என்ற வகையில் உடன் இருப்பவனை விட எதிரிகளையும் அரவணைக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாராட்டுகின்றோம்.
எம்மை பொறுத்த வரை 2005 இலிருந்து ராஜபக்ஷ அரசின் மூலமே முஸ்லிம்கள் மிக அதிகம் நன்மை பெற்றுள்ளனர் என்பதை எப்போதும் அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்துள்ளோம்.
ஆகவே இனியாவது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் ஜனாதிபதி கோட்டாவுக்கும், பிரதமர் மஹிந்தவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவிக்க முன் வர வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் உலமா கட்சி வேண்டிக்கொள்வதாக முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment