புறா வளர்ப்பு குழு மோதலில் 3 பிள்ளைகளின் தந்தை பலி - மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

புறா வளர்ப்பு குழு மோதலில் 3 பிள்ளைகளின் தந்தை பலி - மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம், கடையாக்குளம் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையப் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறா வளர்ப்பில் ஏற்பட்ட பழைய பிரச்சினையே கொலையில் முடிவடைந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று (09) இரவு 9.30 மணியளவில் உயிரிழந்த நபர், கடையாக்குளம் பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த போது, அங்கு வந்த சிலர் புறா வளர்ப்பில் ஏற்பட்ட பழைய பிரச்சினைகளை முன்வைத்து குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு குழு மோதல் ஏற்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேகநபர்கள் மேலும் இருவரை காயப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த நபரின் சடலத்தை புத்தளம் நீதிமன்ற நீதிவான், இன்று புதன்கிழமை (10) காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், புத்தளம் தலைமையகப் பொலிஸாரும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கற்பிட்டி விஷேட நிருபர் - றஸ்மின்)

No comments:

Post a Comment

Post Bottom Ad