பசறை விபத்தில் பலியான தம்பதியரின் அநாதரவான 3, 8, 9 வயது குழந்தைகளை தத்தெடுக்க முன்வந்த வைத்தியர் - ஆசிரியை தம்பதியர் - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

பசறை விபத்தில் பலியான தம்பதியரின் அநாதரவான 3, 8, 9 வயது குழந்தைகளை தத்தெடுக்க முன்வந்த வைத்தியர் - ஆசிரியை தம்பதியர்

பசறை 13ஆவது மைல் கல்லருகே கடந்த 20ஆந் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளை தத்தெடுக்க வைத்தியர் ஒருவரும் அவரது மனைவியான ஆசிரியை ஒருவரும் முன்வந்துள்ளனர்.

பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும், தாம் பொறுப்பேற்பதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அம்பாறை அரசினர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி தரங்கா விக்ரமரட்ணவும், பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்பதியரின் இக்கோரிக்கை குறித்து, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதுளை நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

குறித்த பஸ் விபத்தில் லுணுகலையைச் சேர்ந்த அடாவத்தை தோட்டத்தின் அந்தோனி நோவா என்பவர், கண் சிகிச்சை மேற்கொள்ள தனது மனைவியான பெனடிக் மெரோனாவுடன், பதுளை அரசினர் மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளார். 

அவ்வேளையில் காலையில் பதுளை செல்லும் பஸ் புறப்பட்டதை அவதானித்ததைத் தொடர்ந்து, அவ்விருவரும் முச்சக்கர வண்டியொன்றில் புறப்பட்டு, தவறவிட்ட பஸ்சைப் பிடித்து ஏறியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்தே குறித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. அவ்விபத்தில் இத்தம்பதிகள் உள்ளிட்டு 15 பேர் பலியாகினர்.

இத்தம்பதிகளின் இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகளும் தமது பாட்டியின் அரவணைப்பிலேயே இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், வைத்தியர் வஜிர ராஜபக்‌ஷவும், அவரது மனைவி தரங்கா விக்ரமரட்ணவும், விபத்தில் பெற்றோரை இழந்த 9, 8, 3 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளையும் சட்ட ரீதியாகவே தத்தெடுத்து பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

(பதுளை தினகரன் விசேட நிருபர் - எம். செல்வராஜா)

No comments:

Post a Comment