பாரிய சரிவைச் சந்தித்த கொழும்பு பங்குப் பரிவர்த்தனை - S&P SL20 சரிவைத் தொடர்ந்து அரை மணி நேரம் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

பாரிய சரிவைச் சந்தித்த கொழும்பு பங்குப் பரிவர்த்தனை - S&P SL20 சரிவைத் தொடர்ந்து அரை மணி நேரம் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச் சந்தையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (02) வரலாற்றில் ஒரே நாளிலான மிகப் பெரிய சரிவை பதிவு செய்தது.

அத்துடன் இன்றைய நாளின் கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) ஆனது, 561.75 புள்ளிகள் சரிவடைந்து 8,005.32 எனும் நிலையை அடைந்ததாக, கொழும்பு பங்குச் சந்தை (CSE) தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய நாளின் பங்குப் பரிவர்த்தனை நிறைவில், பரிமாறப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை 232,825,323 ஆகவும் மொத்த புரள்வு மொத்த பரிவர்த்தனை ரூ. 6,931 மில்லியனாக (6,931,104,990.00) ஆகவும் பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னதாக, கடந்த 2020 ஒக்டோபர் 05ஆம் திகதி ASPI ஆனது, 462.99 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்ததமையானது, இதுவரை மிகப்பெரிய வீழ்ச்சியாக பதிவாகியிருந்தது.

அத்துடன், இன்று (02) S&P SL20 ஆனது, 251.77 புள்ளிகள் சரிந்து 3,187.38 புள்ளிகளாக பதிவானது.

பங்குச் சந்தை வரலாற்றில் கடந்த ஜனவரி 21ஆம் திகதி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் ஆனது, 8,000 இனை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு பங்கு சந்தையின் வழமையான பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 சுட்டியானது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையால், இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டன.

இன்று பி.ப. 1.00 முதல் பி.ப. 1.30 வரை இவ்வாறு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய நாளோடு ஒப்பிடும்போது குறித்த S&P SL20 சுட்டியானது குறைவடையும்போது இவ்வாறு பங்குப் பரிவர்த்தனைகள் இடைநிறுத்தப்படுவது வழக்கமாகும்.

No comments:

Post a Comment