இலங்கையின் .LK மீது சைபர் தாக்குதல் - விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நடத்தினார்களா? : விபரிக்கிறார் இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

இலங்கையின் .LK மீது சைபர் தாக்குதல் - விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நடத்தினார்களா? : விபரிக்கிறார் இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ்

இலங்கையில் பதிவு செய்யப்படும், .LK என முடியும் சில இணையத்தளங்கள் மீது இன்று (06) காலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 'டாட் எல்.கே' இணையத்தள பதிவு நிறுவனம் தெரிவிக்கின்றது.

இன்று காலை முதல் .LK இணைய முகவரிகள் பல செயலிழந்ததாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சில இணையத்தளங்களின் முகவரிகளை, வேறு இணையத்தளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் மாற்றியிருந்ததாக அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, கணினி அவசர பிரிவு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, நிலைமையை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாத வகையிலான சிறப்பு நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மாற்றம் செய்யப்பட்ட அனைத்து இணைய முகவரிகளும் தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக அரசாங்கத்திற்கு சொந்தமான பல இணையத்தளங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க இணையத்தங்கள் உள்ளிட்ட ஏனைய இணையத்தளங்களில் IP முகவரியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், இந்த சைபர் தாக்குதலின் ஊடாக எந்தவித தரவுகளும் திருடப்பட்டுள்ளமை குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டுள்ளது?
இந்த சைபர் தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை கண்டறிந்து கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த தாக்குதல் உள்நாட்டிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலா, அல்லது வெளிநாடுகளிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலா என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது குறித்து உரிய தகவல் கிடையாது என பதிலளித்தார்.

சில சந்தர்ப்பங்களில் உள்நாட்டில் இருந்த வண்ணமே, வெளிநாட்டொன்றின் இணைய வழியில் தாக்குதலை நடத்தியிருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

.LK இணையவழியின் ஊடாகவே இலங்கையின் மிக முக்கியமான அனைத்து இணையத்தளங்களும் செயற்படுகின்றமையினால், மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்து இந்த இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பது என பிபிசி தமிழ் வினவியது.

100 சதவீதம் பாதுகாப்பாக, சரியான முறையில் வேலை செய்யும் என தம்மால் உறுதியளிக்க முடியாது என அவர் கூறுகின்றார்.

எனினும், 100 வீதம் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கே தாம் எந்த சந்தர்ப்பத்திலும் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமது இணையத்தள முகவரி கட்டமைப்பில் ஏதேனும் ஒரு தவறு காணப்பட்டமையினாலேயே, இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக கூறிய அவர், அந்த தவறான கட்டமைப்பை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு தவறான கட்டமைப்பு காணப்படுகின்ற இடங்களை சரியாக செயற்படுத்தி, பாதுகாப்பான சேவையை வழங்க முயற்சிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நடத்தினார்களா?
இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்தது முதல் மே மாதம் 18 அல்லது 19ம் திகதிகளில் இணைய வழியூடான சைபர் தாக்குதல் நடத்தப்படுவது கடந்த காலங்களில் வழமையாகவே இடம்பெற்ற சம்பவமாகும்.

இந்த நிலையில், குறித்த சம்பவத்திற்கும், தற்போது நடத்தப்பட்ட இணைய வழி சைபர் தாக்குதலுக்கும் இடையில் தொடர்புள்ளதா என பிபிசி தமிழ், .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸிடம் வினவியது.

இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றமை குறித்து அவதானிக்க முடியவில்லை என அவர் பதிலளித்தார். எனினும், அவ்வாறு இல்லையென்றும் கூற முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மே 18 அல்லது 19ம் திகதிகளில் நடத்தப்படும் சைபர் தாக்குதல்களுக்கும், தற்போது நடத்தப்பட்டுள்ள சைபர் தாக்குதலுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.

போர் நிறைவடைந்த தினத்தில் நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் இணையத்தளங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இன்றையதினம் இணைய பெயர்களின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதனால், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்புள்ளமை குறித்து எந்தவித தகவல்களும் கிடையாது என .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad