இலங்கையை உலுக்கும் தமிழ், முஸ்லிம்களின் போராட்டம் : பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ன நடக்கிறது? - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

இலங்கையை உலுக்கும் தமிழ், முஸ்லிம்களின் போராட்டம் : பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ன நடக்கிறது?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி, நாளுக்கு நாள் வலுப் பெற ஆரம்பித்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறைகளை கண்டித்து, கடந்த 3ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்திற்கு ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பகுதியில் கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, கிழக்கு மாகாணம் முழுவதும் கடந்து, தற்போது வடக்கு மாகாணம் முழுவதும் பயணித்து வருகின்றது.

தமிழர் பிரதேசங்கள் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை, அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் முஸ்லிம்களும் கைகோர்த்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியாக போலீஸார், நீதிமன்ற தடை உத்தரவுகளை பெற்று, ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்க முயற்சித்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை உத்தரவுகளை பொருட்படுத்தாது, தொடர்ந்தும் முன்னோக்கி பயணித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைத் தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு தீபம் ஏற்றி, யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

அதன்போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்ணமாணிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபிக்கான மணல், இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியிலிருந்து மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

தமது இந்த போராட்டத்தை முறியடிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

பொத்துவில் பகுதியில் போராட்டம் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அதனை தடுத்து நிறுத்தும் வகையில் நீதிமன்ற தடையுத்தரவை போலீஸார் பெற்றுக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னரான காலத்தில், போலீஸ் சோதனை சாவடிக்கு அண்மித்த இடங்களில் தமது வாகனங்களின் சக்கரங்களுக்கு ஆணி வைத்து, சக்கரங்களிலுள்ள காற்றை வெளியேற்றி போராட்டத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, தம்மை அச்சுறுத்தும் வகையில் கமராக்களின் போலீஸார் படங்களை எடுத்து, தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டிலுள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பல தசாப்தங்களின் பின்னரே, கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்திற்கு ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்படுவதாகவும் சாணக்கியன் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை வெளிக் கொணர்வதற்காக தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்திரமே, சிங்கள மக்களையும் தம்முடன் இணைந்துக் கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் கோரிக்கை விடுக்கின்றார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தடை ஏற்படுத்தப்படுகின்றமை குறித்து, போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தவத்திரு வேலன் சுவாமி ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

தாம் பயணிக்கும் பாதைகளில் ஆணிகள் வீசப்பட்டிருந்ததாக தவத்திரு வேலன் சுவாமி குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, நாளுக்கு நாள் பெருமளவிலான மக்கள், இந்த பேரணியில் இணைந்துகொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கைக்கோர்ந்த்து, போராட்டத்தை முன்னெடுத்து வருவதை காண முடிகின்றது.

இந்த பேரணி பயணித்த அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்களும் கைகோர்த்து பயணித்திருந்ததை காண முடிந்தது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்து, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, நாளைய தினம் யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad