LK Domain வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பின - 1,000 சம்பளம், உடல் தகனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பதிவு - Cache தரவுகள் காலவதியாகும் வரை காணப்படும் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

LK Domain வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பின - 1,000 சம்பளம், உடல் தகனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பதிவு - Cache தரவுகள் காலவதியாகும் வரை காணப்படும்

இலங்கையின் LK Domain பதிவுத்தளம் மற்றும் Google.lk உள்ளிட்ட இணையத்தளங்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் சீர் செய்யப்பட்டு தற்போது அவை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த சைபர் தாக்குதலில், உள்நாட்டில் பதிவாக்கப்பட்டுள்ள, Google.lk இணையத்தளத்திற்கு செல்லும் நிலையில் அது மற்றுமொரு, இனந்தெரியாத இணையத்தளத்திற்கு செல்லும் நிலை உருவானது.

குறித்த அடையாளம் காணப்படாத இணையத்தளத்தில், தோட்டத் தொழிலாளர்களின் ரூ. 1,000 அடிப்படைச் சம்பள பிரச்சினை, சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உடல் தகனம் உள்ளிட்ட அரசியல், பொருளாதார, இன, மத ரீதியான பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தது.

அத்துடன் இச்சம்பவத்தில், LK (.lk) முடிவைக் கொண்ட சுமார் 10 இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டதாக, LK Domain பதிவுத் தளத்தின் பதிவாளர், பேராசிரியர் கிஹான் டயஸ் குறித்த உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முற்பகல் 8.30 மணியளவில் சீர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் LK DNS தொகுதி வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தொகுதிக்கு வெளியே தற்காலிக (cache) தரவாக சேமிக்கப்பட்டுள்ள சில தரவுகள் இன்னும் Google.lk தேடலில் Google.lk எனத் தேடும்போது காணப்படுவதாகவும், குறித்த cache தரவுகள் காலவதியாகும் வரை அது அவ்வாறு காணப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், +94 114 216061 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது hostmaster@nic.lk எனும் மின்னஞ்சலில் தங்களை தொடர்பு கொள்ளுமாறு LK Domain நிறுவனம் மற்றும் TRC ஆகியன அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment