பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்டது - தமது முழுமையான ஆதரவை வழங்கினர் தமிழ், முஸ்லீம் மக்கள் - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்டது - தமது முழுமையான ஆதரவை வழங்கினர் தமிழ், முஸ்லீம் மக்கள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பித்து மன்னாரை நோக்கி பயணித்தது.

குறித்த போராட்டத்திற்கு வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.

நேற்று காலை திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. பின்னர் அங்கிருந்து நெடுங்கேணியை அடைந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த போராட்டம் மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து. அங்கிருந்து பஜார் வீதி வழியாக கொறவப்பொத்தானை வீதியை அடைந்து பண்டாரவன்னியன் சிலையடியில் முற்றுப் பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இஸ்லாமிய மக்களும் தமது பேராதரவை வழங்கியிருந்தனர்.

வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்திருந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பேரணியுடன் ஒன்றிணைந்து பண்டாரவன்னியன் சிலை வரை இணைந்து சென்றிருந்தனர்.

பின்னர் மத குருக்களால் பண்டாரவன்னியன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் போராட்டம் நிறைவிற்கு வந்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு நெளுக்குளம் சந்தியிலும் பேரணி இடம்பெற்றது. அதனையடுத்து மன்னார் நோக்கி குறித்த பேரணி பயணித்தது.

இதேவேளை வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் பந்தல் அடிக்கும் குறித்த பேரணி சென்றிருந்தது.

பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செ.கயேந்திரன், கயேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியூதீன், செ.மயூரன், ப.சத்தியலிங்கம், மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad