முஸ்லிம் காங்கிரஸ் இனி கசையடி வாங்கிக் கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் - கடந்த மாகாண சபை அமர்வுகளில் கை உயர்த்த ஆரம்பித்தவர்கள் இன்றும் அதையேதான் செய்கிறார்கள் : கல்முனையில் இம்ரான் மஹ்ருப் எம்.பி - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

முஸ்லிம் காங்கிரஸ் இனி கசையடி வாங்கிக் கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் - கடந்த மாகாண சபை அமர்வுகளில் கை உயர்த்த ஆரம்பித்தவர்கள் இன்றும் அதையேதான் செய்கிறார்கள் : கல்முனையில் இம்ரான் மஹ்ருப் எம்.பி

நூருல் ஹுதா உமர்

தேர்தல் காலங்களில் குரானையும், ஹதீஸையும் காட்டி தேர்தல் செய்பவர்கள் தேர்தலின் பின்னர் இஸ்லாமிய நடைமுறைகளை பேணியா அரசியல் செய்கிறார்கள். சம்பவம் நடந்து நான்கு மாதங்களின் பின்னர் மன்னிப்பு நாடகம் அரங்கேறுகிறது. அவர்கள் உண்மையான இஸ்லாமிய அரசியலை செய்பவர்களாக இருந்தால் இஸ்லாமிய சரியாவை பின்பற்றுபவர்களாக இருந்தால் அவர்கள் செய்த வேலைக்கு கசையடி வாங்கிக் கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவித்தார்.

கல்முனையில் இன்றிரவு (16) தனியார் விடுதி ஒன்றில் கல்முனை பிராந்திய ஆதரவாளர்களுடனான குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், மக்களை போன்றே நானும் எங்களின் கட்சியுடன் மிகப்பெரும் ஆதங்கங்களுடன் இருக்கிறேன். கடந்த காலங்களில் எங்களின் கட்சியினர் சொந்த கட்சிக்காரர்களை வளர்ப்பதைவிட கொந்தராத்து கட்சிக்காரர்களை வளர்ப்பதையே குறியாக வைத்திருந்தனர். 

2015 ஆம் ஆண்டு என்னுடைய மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரை நான் தோற்கடித்தேன். அவரை எங்கள் கட்சிக்காரர்களே தேசிய பட்டியல் ஆசனம் கொடுத்து எம்.பியாக்கி மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு இணைத் தலைவராகவும் நியமித்தார்கள். இது போன்ற அநீதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் போனதனாலையே புதிய பாதையை உருவாக்கினோம்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது இப்போதுதான் பிறந்துள்ள குழந்தை. அது இன்னும் வளர வேண்டும். நடக்க, ஓட இன்னும் காலம் எடுக்கும். எங்களை சம்பந்தமே இல்லாத ஹம்பந்தோட்டைக்கு கட்சிப் பணிக்காக நியமித்தார்கள். மஹிந்தவின் கோட்டைக்குள் சென்று வேலை செய்ய பயந்தோம். அங்கு நிலை தலைகீழாக இருந்தது. அங்கும் மக்கள் நிறைய மாற்றங்களுடன் எங்களை வரவேற்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியினால் நிறைய புறக்கணிப்புக்களையும், அவமானங்களையும் சந்தித்தோம். நாங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான எம்.பிக்கள் இல்லை இங்கிருக்கும் எங்களுக்கு சிங்கள மக்களும் தமிழ் மக்களும் நிறைய வாக்களித்துள்ளனர். அவர்களுக்கும் நாங்கள் குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். 

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பேசிய ஒரே பௌத்த சிங்கள தலைவர் என்றால் அது சஜித் பிரேமதாச மட்டுமே. அவர் பாராளுமன்றத்தில் ஜனாஸா விடயம் தொடர்பில் பேசிய பின்னரே சிறுபான்மை தலைவர்களான ரவூப் ஹக்கீம் போன்றோர் வாய்திறந்தார்கள். 

கடந்த மாகாண சபை அமர்வுகளில் மதநெகுமவில் கையை உயர்த்த ஆரம்பித்த இவர்கள் இன்றும் அதையேதான் செய்கிறார்கள். இவர்களை தொடர்ந்தும் நம்ப முடியாது. எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தனித்தே களமிறங்குவோம். இது தொடர்பில் கட்சியின் உயர்பீடத்திடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன். இவர்கள் செய்த காரியத்தினால் பொதுஜன பெரமுன தலைவர் பாராளுமன்றத்தில் பேசும் விடயங்களே பெறுமானம் இல்லாமல் போகியுள்ளது.

இந்த அரசை இயக்குவது ஊடகங்களும், காவியுடை தரித்த பிக்குகளுமே. நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித்தை மக்களாகிய நாம் நம்ப வேண்டும். கடந்த நல்லாட்சி அரசில் வீடமைப்பு அமைச்சராக இருந்து நிறைய சிறுபான்மை மக்களுக்கு நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மோசமான ஒன்றாக இருந்தது. எங்களுக்கு இருந்த நல்ல பெயரையும் அந்த காலத்தில் இழந்துவிட்டோம். அந்த அரசாங்கத்தின் தலைவர் யார் என்பதை இறுதி வரை சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. 

ஆனாலும் இந்த அரசாங்கத்தினால் எதிர்வரும் காலங்களில் காதி நீதிமன்றம், மதரஸா என்பன சிக்கலில் மாட்டிக் கொள்ள போகின்றது. அவற்றை நாங்கள் சரியாக அணுகி மக்களுக்கு ஆதரவாக செயற்படுவோம். 

2015 வரை தோல்வியை மட்டுமே சந்தித்த நாங்கள் இனி தலைதூக்க முடியாது என்றார்கள். அதிகாரத்தில் இருந்த மஹிந்தவை தோற்கடித்து ஆட்சியை உருவாக்கினோம். 2025 யிலும் அதை சாத்தியமாக்குவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad