கிழக்கு முனையத்தை பாதுகாத்து மேற்கு முனையத்தை தாரை வார்க்க முடியாது - துறைமுக ஊழியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

கிழக்கு முனையத்தை பாதுகாத்து மேற்கு முனையத்தை தாரை வார்க்க முடியாது - துறைமுக ஊழியர் சங்கம்

(இராஜதுதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க போராட்டத்தையும் முன்னெடுப்போம். இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் முன்னெடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயப்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க கடந்த மாதம் தொடக்கம் முன்னெடுத்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நேற்று பிரமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்தது. 

கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் உரிமம் முழுமையாக துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சரவை மட்டத்தில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் இன்று பகல் 12 மணிக்கு பிறகு 4 நாட்களாக முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டுள்ளோம்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.

தேசிய வளங்களை பாதுகாக்கவே போராட்டங்களை முன்னெடுத்தோம். இதில் கிழக்கு முனையம், மேற்கு முனையம் என்ற வேறுபாடு கிடையாது.

மேற்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்க முயற்சித்தால் அதற்கும் எதிர்ப்பினை வெளியிடுவோம். அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து துறைமுக சங்க ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.

கிழக்கு முனையத்தை பாதுகாத்து மேற்கு முனையத்தை தாரைவார்க்க முடியாது. அனைத்து தப்பினரது ஆதரவுடன் அடுத்த வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment