இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமான்ன மற்றும் அணியின் பிரதான பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயணத்தில் பங்கேற்கத் தயாராகி வந்த, தற்காலிகமாக பெயரிடபட்ட அணிக்கு மேற்கொண்ட PCR சோதனைகளைத் தொடர்ந்து இவ்விடயம் தெரிய வந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், பணிக்குழாம் உள்ளிட்ட 36 பேர் கொண்ட முழு குழுவுக்கும் நேற்று (02) PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதன் முடிவுகளின் அடிப்படையில் குறித்த இருவரும் இவ்வாறு கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, மிக்கி ஆத்தர் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகிய இருவருக்கும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறித்த 36 பேர் கொண்ட குழுவானது, கடந்த ஜனவரி 28 ஆம் திகதி, 3 குழுக்களாகவும், தனித்தனியாகவும் வெவ்வேறு நேரங்களில், பயிற்சிகளை மேற்கொண்டதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயண அட்டவணையை, தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பது தொடர்பான சாத்தியம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் அதன் அனைத்து மையங்களிலும் உரிய சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி வழமையான நடவடிக்கைகளை தொடரும் எனவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அண்மையில், பினுர பெனாண்டோ, சாமிக கருணாரத்ன ஆகிய இரு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment