பாகிஸ்தான் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் இரு தரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது : கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

பாகிஸ்தான் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் இரு தரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது : கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலானது இரு தரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட ரீதியில் நபர்களை தேர்ந்தெடுத்து சந்திப்புக்களுக்கான ஏற்பாடு செய்யப்படுவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வி : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சந்திப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்த சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே ?

பதில் : வெளிநாட்டு அரச தலைவர்கள் நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அவர்களின் நிகழ்ச்சி நிரல், சந்திப்புக்கள் தொடர்பில் இரு தரப்பு இராஜாதந்திர குழுக்களாலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோன்று அவர்கள் செல்ல திட்டமிட்டுள்ள இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த நிகழ்வு இரத்தாகக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.

இவ்வாறான சகல நடவடிக்கைகளும் இரு தரப்பினராலும் நியமிக்கப்படுகின்ற இராஜாதந்திர குழுவினாலேயே முன்னெடுக்கப்படும். இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் போது பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்படும். அது பொறுப்பு எம்முடையதுமாகும். மாறாக தனிப்பட்ட ரீதியில் நபர்களை தேர்ந்தெடுத்து எந்த சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்றார்.

No comments:

Post a Comment