(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கம் இலங்கையை இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கியது. இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. கொழும்பு துறைமுக விவகாரத்தில் அயல் நாடுகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் முறையற்ற வகையில் சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் இன்று அரசாங்கத்தை இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன.
எம்.சி.சி ஒப்பந்தம், கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்கல், ஜெனிவா ஒப்பந்தம் ஆகியவை நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களாகவே கருதப்பட்டன.
எம்.சி.சி ஒப்பந்தம், ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் நெறிப்படுத்தியது. இருப்பினும் இன்றும் இவ்விடயங்களை கொண்டு இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடி நிலை காணப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த அரசாங்கமே கைச்சாத்திட்டது.
2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்திய பிரதமர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பலமுறை இவ்விடயம் தொடர்பில் பேசியுள்ளார்.
கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை முழுமையாக செயற்படுத்த முடியாது. தேவையாயின் மாற்றம் செய்ய முடியும் என குறிப்பிட்டதற்கு அமையவே இந்திய நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் வழங்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்ட்டது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அரசாங்கத்துக்குள் கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்தன. அனைத்து தரப்பினரது கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து ஜனாதிபதி நாட்டுக்கு சாதகமான தீர்மானத்தையே எடுத்துள்ளார்.
துறைமுகம் தனித்து செயற்பட முடியாது. அயல் நாடுகளின் பங்களிப்பு அவசியமாகும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அயல் நாடுகளின் அபிப்ராயங்களை கோருவது அவசியமாகும்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மாத்திரமல்ல அனைத்து முனையங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் மேல் முனையத்தை அபிவிருத்தி செய்யும் உரிமம் தனியார் நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அபிவிருத்தியின் போது பிற நாட்டு நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பில் ஆராய வேண்டும். கிழக்கு முனையத்தை 3 வருட காலத்திற்குள் முழுமையாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.
No comments:
Post a Comment