மியன்மாரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் : புதிய சட்டங்களை அறிமுகம் செய்துள்ள இராணுவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 14, 2021

மியன்மாரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் : புதிய சட்டங்களை அறிமுகம் செய்துள்ள இராணுவம்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக ஒன்பதாவது நாளாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் திரண்டனர்.

எதிர்ப்பாளர்களை கைது செய்யும் இராணுவத்தின் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் குடியிருப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மிகப்பெரிய நகரான யங்கோனில் வெள்ளை நிற ஆடை அணிந்து கைது செய்யப்பட்டிருக்கும் ஆளுங்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியை விடுதலை செய்யக் கோரும் பதாகைகளுடன் பொறியியல் மாணவர்கள் பேரணி நடத்தினர்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலான காலத்தில் மியன்மாரில் இடம்பெற்று வரும் இந்த பாரிய ஆர்ப்பாட்டங்களில் இணைந்திருக்கும் பஸ் ஓட்டுநர்கள் தமது வண்டிகளை நெடுஞ்சாலைகளில் மெதுவாக செலுத்தி, ஹோர்ன்களை ஒலிக்கச் செய்துள்ளனர். 

தலைநகர் நைபிடோவில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை தொடராகச் செலுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தென்கிழக்கு கரையோர நகரான டெவியில் கொழுத்தும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் பேரணியாகச் சென்றனர். 

தொலைதூர நகரான வைமோவில் தேசிய கொடிகளை அசைத்தும் புரட்சிப் பாடல்களை இசைத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். 

தேசிய அளவில் இடம்பெற்ற பல ஆர்ப்பாட்டங்களிலும் ஆங் சான் சூச்சியின் படங்களை மக்கள் ஏந்தி நின்றனர்.

கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் இதுவரை 384 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரின் இராணுவ அரசாங்கம் யாரை வேண்டுமானாலும் கைது செய்வதற்கும் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வகை செய்யும் புதிய சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அவற்றின் மூலம் இராணுவ அதிகாரிகள் முன் அறிவிப்பின்றி எந்த இடத்தில் வேண்டுமானாலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment