இ.போ.ச வட பிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குலபாலச்செல்வனின் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை அடுத்து சுமுகமான தீர்வு கிடைக்குமென போராட்டத்தை முன்னெடுத்த போக்குவரத்து சங்க ஊழியர்கள் மத்தியில் அமைச்சரது பிரதிநிதியாக கலந்துகொண்ட கந்தசாமி கமலேந்திரன் மற்றும் வேலும்மயிலும் குகேந்திரன் ஆகியோர் உறுதியளித்துள்ளதை அடுத்து முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பதாக வட பிராந்திய முகாமையாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த குலபாலசிங்கம் இன்றையதினம் பதவியேற்க இருந்த நிலையில் குறித்த நியமனத்தை இரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இ.போ.ச தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அத்துடன் குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு வட பிராந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கொண்டுசென்று தமக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் துறைசார் அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான தீர்வை சுமுகமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கந்தசாமி கமலேந்திரன் தலைமையிலான அமைச்சரது பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கோண்டாவில் சாலைக்கு சென்று போராட்டத்தை முன்னெடுத்த ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தெரியப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் ஊழியர்களின் நன்மை கருதி அவர்களது விருப்புகளுக்கு ஏற்றவாறான தீர்வே காலக்கிரமத்தில் பெற்றுத்தரப்படும் என்றும் அமைச்சரது பிரதிநிதிகளால் போராட்டகாரர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் புறக்கணிப்பை நிறைவுக்கும் கொண்டு வந்திருந்தனர்.
சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வம், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவமிக்கவர்.
அத்துடன் கடந்த நல்லாட்சியில் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டார். மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின் பதவிநிலை பிரச்சினைகளை சீர் செய்து வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வம், வட பிராந்திய பிரதான முகாமையாளராக நேற்று முன்தினம் நியமனம் வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கான உரிய நியமனக் கடிதத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் அவரது பதவி இடைறிறுத்தப்பட்டதை எதிர்த்து வட பிராந்தியத்தின் 7 சாலைகளினதும் தொழிற்சங்கள் நேற்றுக் காலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து குணபாலச்செல்வத்தின் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.
அத்துடன் அவரது நியமனத்தை நிறுத்தினால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தனர். எனினும் நியமனம் நிறுத்தப்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment