ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் - சுகாதார அமைச்சுக்குள் நுழைந்ததால் அமைதியின்மை - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் - சுகாதார அமைச்சுக்குள் நுழைந்ததால் அமைதியின்மை

(எம்.மனோசித்ரா)

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் அழைப்பிற்கமைய நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதோடு, 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.

இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து பேரணியாக சுகாதார அமைச்சின் வளாகத்தை சென்றடைந்தனர். 

சுகாதார அமைச்சிற்கு முன்பாக நீண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், அமைச்சுக்குள் நுழைந்தால் அங்கு அமைதியற்ற நிலை தோன்றியது.

இதன்போது, குறித்த பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்த்ககது. இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் தம்மால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அதற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. 

எனவேதான் கலந்துரையாடலுக்கு அப்பால் சென்று வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக வேலை நேர கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படாமை, தற்காலிகமாக வேலை செய்யும் ஊழியர்களை நிரந்த சேவையில் இணைக்காமை, தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல், சக ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்கள் சிகிச்சை பெறல் மற்றும் அவர்களுடன் தொடர்பினைப் பேணியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படல் என்பவற்றின் போது கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் செயலாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர், பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை காண்பதே எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் இலக்காகும். 

கடந்த 6 மாத காலமாக நாம் எமது பிரச்சினைகள் தொடர்பில் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எதற்கும் தீர்வு வழங்கப்படவில்லை. எனவேதான் இவ்வாறு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போதும் தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது போராட்டம் தொடரும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad