ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னின்று செயற்பட்டமை தவறு என்றால் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர தயார். பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணி அமைத்துள்ளோம் என்ற காரணத்தினால் பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை அமைச்சர் விமல் வீரசன்சவுக்கு கிடையாது. பொதுஜன பெரமுனவின் தலைமைத்தவத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டமைக்கு இவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று ஊடக சந்திப்பில் குறிப்பிட்டதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச மீகமுவ நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து வெளியேறி அப்போதைய அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆதரவாக செயற்பட்டமை தவறு என்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர தயார்.
2015ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த போது மீண்டும் அவர் தலைமையில் ஆட்சியை கைப்பற்ற முன்னின்று செயற்பட்டதும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறவும் ஒத்துழைப்பு வழங்கியமை தவறு என்றால் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர தயாராக உள்ளேன்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக்குள் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதன் பொருள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட முடியாது.
இரண்டு அரச தலைவர்களுக்கும் கட்சிக்குள் உயரிய பதவிகள் வழங்கப்பட்டால் பலமான அரசியல் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியும் என்று கருதினேன்.
பொதுஜன பெரமுன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் பொதுஜன பெரமுன முன்னணி வகிக்கிறது. இதனால் பிற கட்சிகளின் பேச்சுரிமை மறுக்கப்படவில்லை. அனைத்து தரப்பினருக்கும் பேச்சு சுதந்திரம் காணப்படுகிறது.
நான் பொதுவாக குறிப்பிட்ட கருத்தை ஒரு தரப்பினர் பெரிதுப்படுத்தி விட்டார்கள். சிறு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தூக்கி எறிவதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளக் கூடாது. என்றார்.
No comments:
Post a Comment