மியான்மாரில் பேஸ்புக் சேவைகளுக்கு தடை : ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

மியான்மாரில் பேஸ்புக் சேவைகளுக்கு தடை : ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்

மியன்மாரில் பேஸ்புக், இணையத்தளத் சேவைகளுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, மியன்மாரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையத்தள சேவை வழங்குனர்களால், பேஸ்புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம், நாட்டின் “ஸ்திரத்தன்மை” பேணுவதற்காக பெப்ரவரி 7 ஆம் திகதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. 

மேலும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் பேஸ்புக் பக்கத்துக்கு 10,000 க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மியான்மரில் கடந்த திங்கட்கிழமை நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்டாரெஷ் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுகளைப் புறக்கணிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும், ஒரு நாட்டை இப்படி ஆட்சி செய்யக் கூடாது என ஆட்சிக் கவிழ்ப்பு நடத்திய தலைவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

மியான்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"மியான்மாரில் ராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம். சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியான்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

"மியான்மர் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது, இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியான்மார் ராணுவத்துக்கு புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்," என்றார்.

No comments:

Post a Comment