சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான 550 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (04.02.2021) காலை இரண்டாவது நாளாக மட்டக்களப்பு தாளங்குடாவிலிருந்து ஆரம்பமானது.
காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், செங்கலடி, ஓட்டமாவடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று மாலை முல்லைத்தீவு நகரத்தை அடையவுள்ளது.
பொத்துவிலிருந்து நேற்று புதன்கிழமை காலை ஆரம்பமான ஆர்ப்பாட்டம் நேற்று மாலை தாளங்குடாவில் இடைநிறுத்தப்பட்டது.
மழைக்கு மத்தியில் நேற்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ்த் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் பலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment