மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்து விட்டனர், தனி நபருக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுக்கும் வலைக்குள் விழ வேண்டாம் - ஆனந்தசங்கரி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்து விட்டனர், தனி நபருக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுக்கும் வலைக்குள் விழ வேண்டாம் - ஆனந்தசங்கரி

ஆன்மீக ரீதியில் செயற்படும் மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்து விட்டார்கள் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழ்த் தேசிய பரப்பில் இருந்து செயற்படுவதாக கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும் மதத் தலைவர்களும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் வவுனியாவில் ஒன்று கூடி கலந்துரையாடல் மேற்கொண்டதாக ஊடகங்களில் வந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. மதத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இதற்கு ஆதரவு தெரிவித்தமை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

ஆன்மீக ரீதியில் செயற்படும் மதத் தலைவர்கள் இந்த அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்துவிட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

2004ஆம் ஆண்டு மதத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி அன்று நடந்த ஜனநாயக விரோத செயலை கண்டிக்காதது ஏன்? 2004ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவிற்கு ஒரு கட்சியும் தலைவர் பதவியும் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அதனைப் பெற்றுக் கொண்டார்.

விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் ஜனநாயக விதிமுறைகளை முற்று முழுதாக மீறி, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தவர்கள் இன்று வெவ்வேறு கட்சிகளாக பிரிந்து ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கு மதத் தலைவர்களை பயன்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அந்த அரசியல் கட்சியில் உள்ள எவருக்கும் ஜனநாயகத்தைப் பற்றி பேசும் அருகதை இல்லை.

முழுக்க முழுக்க ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு, 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து செயற்பட்டவர்களின் அணியே அது. பதவியை கொடுத்த அதே விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்ததாக கூறிய சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

யுத்தம் முடிந்த பின்னராவது இவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கி செயற்படவில்லை, 2010ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு இவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கவில்லை அது ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நல்லிணக்க ஆட்சிக் காலத்தில், மதத் தலைவர்களை அழைத்து இவ்வாறானதொரு கட்டமைப்பை உருவாக்கியிருந்தால், வெகு இலகுவாக எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை? அந்த நேரத்தில் பதவி மோகம் கொண்ட ஒரு சிலருக்கு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுகம் கிடைத்தபடியால் ஒரு கட்டமைப்பு தேவை ஏற்படவில்லை.

2020ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவின் பதவி பறிபோய்விட்டது. மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதனால் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

இந்த நபர்களுக்கு மதத் தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தமிழ் மக்களுக்கான அரசியல்வாதிகளின் வரலாற்றுத் தவறுகளில் இதுவும் ஒன்றாக அமைந்துவிடும்.

2015 இல் சரி பிழைக்கு அப்பால் அமைந்த தேசிய அரசாங்கத்தால் எதிர்கட்சித் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ, ஜ.நா. சபை மனித உரிமை மீறல்களுக்கான விடயங்களுக்கோ, இவ்வாறான மதத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருந்தால், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒரு சில பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை கண்டிருக்கலாம்.

அதை எல்லாம் விடுத்து ஒரு தனி நபருக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்படும் இந்த கட்டமைப்பின் வலைக்குள் வீழ்ந்துவிட வேண்டாம் என, மதத் தலைவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

2004ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி 22 ஆசனங்களைப் பெற்ற மர்மம் இன்று வரை எவராலும் வெளிக்கொண்டுவரப்படவில்லை அது ஏன் எதற்காக என்பதையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment