மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டார் ஆஸ்திரேலிய பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டார் ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. 

அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது.

அதற்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை நீக்கி, நம்பிக்கையூட்டும் வகையிலும், தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இன்றே பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.

ஆஸ்திரேலியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கும் நிலையில், அது குறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, முக்கியமான விஷயங்களை சொல்கிறோம். 

தடுப்பூசி பாதுகாப்பானது, முக்கியமானது. கொரோனாவை முன்களத்தில் எதிர்த்து நின்று போராடுபவர்களுக்கும் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களுக்கும் முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம்’ என்று கூறினார்.

இதையடுத்து, 85 வயதான ஜேன் மாலிசியாக் என்ற மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சிலருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியே அடுத்த சில வாரங்களுக்கு பொதுமக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. 

அடுத்த வாரத்திற்குள் 60000 டோஸ் மருந்து செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் சுமார் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆஸ்திரேலியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதேபோல் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கும் தற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வரும் வாரங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறி உள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment