கொரோனா தடுப்பூசி இலங்கையில் உற்பத்தி செய்வது குறித்து ஆராய்வு - ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற செயற்பாடுகளை சார்ந்தது : எதிரணி குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் சுசில் மறுப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

கொரோனா தடுப்பூசி இலங்கையில் உற்பத்தி செய்வது குறித்து ஆராய்வு - ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற செயற்பாடுகளை சார்ந்தது : எதிரணி குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் சுசில் மறுப்பு

கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் எதிரணி விமர்சித்தாலும் அந்த செயற்பாடு வெற்றிகரமாக இடம்பெறுகிறது. அந்த மருந்தையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்வது குறித்து இராஜதந்திர பேச்சுக்கள் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி இடம்பெற்று வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், பல்வேறு வழிகளில் எதிர்க்கட்சியினரால் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் எமது நாட்டில் மட்டுமன்றி பல நாடுகளிலும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குகின்ற சவால்கள் உள்ளன. கொவிட் கட்டுப்பாட்டிலேயே அனைத்து நாடுகளினதும் பொருளாதாரமும் தங்கியுள்ளது. 

இதுவரை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது. நாளையாகும்போது முதலாவது சுற்றில் எமக்கு கிடைத்த தடுப்பூசிகள் அனைத்தையும் வழங்கி நிறைவுக்கு கொண்டுவர முடியும்.

இன்னும் இரண்டு மாதங்களில் ஏற்கனவே பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். சீனாவிலிருந்து இந்த வார இறுதிக்குள் ஒரு தொகை தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அதேபோல சுகாதார அமைச்சு, 18 மில்லியன் எஸ்ரா செனிகா தடுப்பூசிகள் இறக்குமதி செய்துள்ளது. அதற்கமைய சுமார் 10 மில்லியன் பேருக்கு மே மாதத்திற்குள் இந்த தடுப்பூசிகளை வழங்கி நிறைவுபடுத்தலாம். 4000 நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில் 22.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட எமது நாட்டில் 45 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிவிட முடியும். அதேபோல ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 100 வீதம் வெற்றியளித்திருப்பதாகவே அறிய முடிகிறது. ஆகவே அந்த மருந்தையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும் அளவுக்கான இராஜதந்திர பேச்சுக்கள் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி இடம்பெற்று வருகின்றன.

சுகாதார வழிகாட்டல்களுடன் சுற்றுலாத்துறை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் நடந்து 6 மாதங்களாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு ஒருவரை நியமிக்க பழைமை வாய்ந்த அக்கட்சிக்கு முடியாமலிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியினரிடையே இன்றுதான் அமைப்பாளர்கள்கூட நியமிக்கப்படுகின்றனர். இதுவே தற்போதைய எதிரணியினரின் நிலைமை.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றி விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்திற்கமைய இருவழிகளில் ஆணைக்குழுவை நியமிக்க முடியும். சாதாரண ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவே அவையாகும். 

இந்த அரசாங்கம் சாதாரண ஜனாதிபதி ஆணைக்குழுவையே நியமித்தது. ஆணைக்குழு முதலாவதாக சாட்சியங்களின் வாக்குமூலங்களை பொலிஸார் ஊடாக பதிவு செய்யும். அதன் பின் ஆணைக்குழுவினால் சாட்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர்களுக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாகலாம். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு குறுக்கு கேள்வி கேட்பதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 

ஆகவே இந்த ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் என்பது நீதிமன்ற செயற்பாடுகளுக்கு சார்ந்ததாகவே இடம்பெறுகின்றன.

அப்படிப்பட்ட ஆணைக்குழுவுக்கு முன்பாக வழங்கப்படுகின்ற சாட்சியங்களை வைத்து சட்டமா அதிபர் ஊடாக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும். வழக்கு தாக்கல் செய்யவும் அவற்றை வழிநடத்தவும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுவதன் ஊடாக இலகுவாகின்றது. 

சுமார் ஒரு இலட்சம் பக்கங்கள் அந்த ஆணைக்குழுவின் அறிக்கை Rமந்துள்ள நிலையில் அவற்றை ஆராய சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அதிக ஆளனி ஈடுபடுத்தப்பட வேண்டியிருக்கும். அறிக்கையில் உள்ள ஆதாரங்களை வைத்து வழக்கு தாக்கல் செய்வதே இதன் இலகுவான காரியமாக அமையும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad