கஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, பாகிஸ்தான் தீர்வு காண வேண்டும் - தூரமாகி இருக்கும் சிங்கள, முஸ்லிம் அன்னியோனிய உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : கலாநிதி அசேல விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

கஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, பாகிஸ்தான் தீர்வு காண வேண்டும் - தூரமாகி இருக்கும் சிங்கள, முஸ்லிம் அன்னியோனிய உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : கலாநிதி அசேல விக்ரமசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

அடிப்படைவாதிகளாலும் ஈஸ்டர் குண்டுத் ததாக்குதல் காரணமாகவும் தூரமாகி இருக்கும் சிங்கள, முஸ்லிம் அன்னியோனிய உறவு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதேபோன்று இந்தியா - பாகிஸ்தான் முரண்பாட்டால் கஷ்மீர் மக்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரின் ஆலோசகர் கலாநிதி அசேல விக்ரமசிங்க தெரிவித்தார்.

கஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜம்மு கஷ்மீர் பிரச்சினை மிகவும் நீண்ட காலமாக இடம்பெறும் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருக்கின்றது. ஆயுதம் மற்றும் யுத்தத்தால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த விடயத்துக்காக தொடர்ந்து பிரச்சினை பட்டுக்கொண்டிருப்பதால் பாதிக்கப்படுவது அப்பாவி கஷ்மீர் மக்களாகும். அந்த மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க குரல் எழுப்ப வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் இருக்கின்றது.

மேலும் பாகிஸ்தான் இலங்கைக்கு மிகவும் நட்பு கொண்ட நாடாகும். எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பாகிஸ்தான் அரசாங்கம் எங்களுக்கு பாரியளவில் உதவி செய்திருக்கின்றது.

எமது நாட்டில் சிங்கள, முஸ்லிம் உறவு அண்மைக் காலமாக சற்று தூர விலகி இருக்கின்றது. அடிப்படை வாதிகளாலும் ஈஸ்டர் குண்டுத் தாக்குல் காரணமாகவும் எமக்கிடையில் இருந்து வந்த சிங்கள, முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவரவர் மதத்தை பின்பற்றி நடப்பதற்கு சகல உரிமையும் எமது நாட்டில் இருக்கின்றது.

மேலும் ஒருசில அடிப்படை வாதிகளின் செயற்பாட்டால் மத அடிப்படையில் முறுகல் நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கின்றது. அந்த நிலைமையை போக்கி, மீண்டும் எமது அன்னியோன்னிய உறவை கட்டியெழுப்ப வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எமது நாடடில் வழங்கப்பட்டிருக்கும் மத உரிமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. 

எனவே எமக்கு எப்போதும் உதவி வரும் பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து இலங்கையர்களாகிய நாங்களும் கஷ்மீர் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தயாராக இருக்கின்றோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment