பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கான தடையை நீக்கி யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கான தடையை நீக்கி யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளை வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கம் செய்தது.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஒருமுக விளக்கத்தில் வழங்கிய கட்டளையை பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனையை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நீக்கியது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை தடை உத்தரவு வழங்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட்-19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

அதனடிப்படையில் பிரதிவாதிகள் முன்னிலையாகாத நிலையில் தடை உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

இன்று இந்த தடை உத்தரவு வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன் வி.திருக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

அதனால் ஒருமுக கட்டளையாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம் கோவிட்-19 நோய்த் தொற்று சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டால் அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை அறிவுறுத்தியது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad