விடாப்பிடியாக இருந்துவரும் கம்பனிகளுக்கு தொழிலாளர்கள் விடுத்த முதல் எச்சரிக்கை - நாளைய பேச்சில் நல்ல தீர்வு இல்லாவிடின் முடிவு மூர்க்கமாக இருக்கும் என்கின்றனர் ஜீவன் மற்றும் செந்தில் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

விடாப்பிடியாக இருந்துவரும் கம்பனிகளுக்கு தொழிலாளர்கள் விடுத்த முதல் எச்சரிக்கை - நாளைய பேச்சில் நல்ல தீர்வு இல்லாவிடின் முடிவு மூர்க்கமாக இருக்கும் என்கின்றனர் ஜீவன் மற்றும் செந்தில்அடையாள வேலை நிறுத்த போராட்டம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த முதல் முடக்கம் முதலாளிமார் சம்மேளனத்தை முடக்கியுள்ளது. விடாப்பிடியாக இருந்த கம்பனிகளுக்கு தொழிலாளர்களின் ஒன்றுமை எச்சரிக்கையாகும். 

நாளைய பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கவில்லையென்றால் போராட்டம் மேலும் மூர்க்கமடையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தெரிவித்தனர். 

மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லையென்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டு வந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்து போராடுவதற்கு தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளனர். 

அதேநேரம் கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம் என்று பலர் கூறுகிறார்கள் உலகளவில் கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடத்திற்கு ஒரு முறைதான் நடைபெற்றது. ஆனால் இங்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்றது. அப்படி இருக்கும் போது இது அடிமை சாசனம் என்று கூறுவது எவ்வாறு. 

அதேநேரம் இன்றுள்ள பல தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் இருப்பதனையே விரும்புகின்றனர், ஏன் என்றால் அதில் சம்பளம் மாத்திரமன்று நலன்புரி விடயங்களும் அடங்கியிருக்கிறது. 

நாளை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம். சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவித்தல் நாளை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

இது இ.தொ.காவின் பலத்தைக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல. கம்பனிகளுக்கு எதிரானது. மக்கள் தமது பலத்தைக் காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில், 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்த முடிவு நாளை திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும்.

மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்த தொழிலாளர்களின் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து தமது பலத்தை கம்பனிகளுக்கு நிரூபித்துள்ளனர். 

இ.தொ.கா. எப்போதும் மக்கள் பக்கம் நின்றே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகளால் தொழிலாளர்கள் பல நன்மைகளை அடைந்துள்ளனர்.

நாளைய தினம் சம்பள நிர்ணய சபையில் மக்கள் எதிர்பார்த்த முடிவு வருமென்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad