ஜெனீவாவில் மனித உரிமை மீறல் குறித்து TNA பேசுவதாயின் புலிகளால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையே முதலில் பேச வேண்டும் - யாழ். சிவில் சமூக நிலையத்தின் இணைப்பாளர் அருண் சித்தார்த் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

ஜெனீவாவில் மனித உரிமை மீறல் குறித்து TNA பேசுவதாயின் புலிகளால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையே முதலில் பேச வேண்டும் - யாழ். சிவில் சமூக நிலையத்தின் இணைப்பாளர் அருண் சித்தார்த்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் மனிதவுரிமை மீறல்கள் குறித்து பேசுவதென்றால் முதலில் விடுதலைப் புலிகள் அமைப்பால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலேயே பேச வேண்டுமென யாழ். சிவில் சமூக நிலையத்தின் இணைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த 11 வருடங்களாக தமிழ் மக்களின் துன்பங்களைக்காட்டி ஜெனிவாவுக்கு சுற்றுலாச் சென்று இதுவரை தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் பெற்றுத்தரவில்லை.

அவர்கள் ஒவ்வொரு முறையும் ஜெனிவா செல்வது தமது சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காகவும் பணம் சேர்ப்பதற்காகவும் அன்றி தமிழ் மக்களின் உண்மையான தேவைகளை பேசுவதற்காக அல்ல.

அவர்கள் மனிதவுரிமைகள் பற்றி பேசுவதானால் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ள அனைத்து விதமான மனிதவுரிமைகள் பற்றியும் பேச வேண்டும். 

விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டுள்ள மனிதவுரிமை மீறல்கள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற ஏனைய ஆயுதக் குழுக்களால் செய்யப்பட்டுள்ள மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் பேச வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் ஆரம்ப காலங்களில் ஆயுதக் குழுக்களிலிருந்த தருணத்தில் நிகழ்த்தப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் குறித்து எந்தவொரு மனிதவுரிமை நாடுகளிலும் பேசப்படவில்லை. 

மனிதவுரிமைகள் என்பது தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அது குறித்தும் அவர்கள் இதுவரை பேசவில்லை. இந்திய மீனவர்கள் தொடர்பில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால், இலங்கை மீனவர்கள் இந்திய இராணுவத்தால் தாக்கப்படுகின்றமை குறித்து இவர்கள் பேசுவதில்லை.

அனந்தி சசிதரன் போன்றவர்கள் ஜெனிவா செல்வதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள். அவருடைய கணவர் எழிலன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த காலகட்டத்தில் அவரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நிலைமை?.

மனிதவுரிமைகளை மீறியவர்களே இன்று மனிதவுரிமைகள் பற்றி பேசிக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்த மனிதவுரிமைகள் முதலில் பேசப்பட வேண்டும். 

பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதற்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் 1974ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவால் யாழ். பல்கலைக்கழகம் அமைக்கப்படும் போது அதனை நிறுத்துவதற்காக இரண்டு நாட்கள் ஹர்த்தால் செய்தனர். யாழ். மண்ணில் ஒரு பல்லைக்கழகம் வருவதை விரும்பியவர்கள் அல்ல இவர்கள்.

தமது சுயலாப அரசியலுக்காக மாணவர்களையும், இளைஞர்களையும், தமிழ் மக்களையும் உசுப்பி வாழ்ந்தவர்களே அன்றி நீண்ட கால நோக்கில் எதனையும் செய்யவில்லை.

உண்மையில் பல்கலைக்கழக்கத்தில் நினைவேந்தல் செய்ய வேண்டியது விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவராக இருந்த விஜிதரன் முதற்கொண்டு இராஜினி திரனகம, செல்வி வரையானவர்களுக்கே நினைவேந்தல் செய்யப்பட வேண்டும். முதல் முதலில் சர்வதேச பதக்கம் வென்றவராக செல்வி இருந்தார். 

ஆகவே, நினைவிடங்கள் அமைக்கப்பட வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்காகவும் அமைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சிலரின் அரசியல் தேவைக்காக அமைக்கப்பட கூடாது.

கூட்டமைப்பு ஒரு பக்கத்தை மாத்திரமே பேசுகிறது. அதனால்தான் எமக்கான நியாயமும் இன்றுவரை கிடைக்கவில்லை. மனிதவுரிமைகள் பற்றி பேசுவதென்றால் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பேச வேண்டும். 

விடுதலை என்ற பேரில் ஆயுதம் தூக்கியவர்கள் எம்மக்கள் மீது இழைத்த கொடுமைகள் இதுவரை பேசப்படவில்லை. இது தொடர்பில் பலநூறு ஆவணங்கள் உள்ளன. ஆகவே, இனியாவது ஒட்டு மொத்த மக்களுக்காக பேசினால் நாம் ஆதரவளிக்கத் தயார் இல்லாவிடில் எதிர்ப்பை வெளியிடுவோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment