அமெரிக்க பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்போது தனது அணுசக்தி திட்டத்திற்கான நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக மாற்றியமைக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீஃப் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவித்தாா்.
மேலும் ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கிடையே, தற்போது அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் வெளியேற்றப்பட்டு, ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்தால் அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோ பைடனின் நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.
மேலும் 2015 அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் ஈரான் மற்றும் உலக வல்லரசுகளுக்கிடையேயான 2015 உடன்படிக்கையை புதுப்பிக்கத் தயாராக இருப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை கூறியது.
பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்கான வொஷிங்டனின் சலுகை குறித்து தெஹ்ரானின் நிலைப்பாட்டை அறிவிக்கும்போது மொஹமட் ஜவாத் ஸரீஃப் இன்று வெள்ளிக்கிழமை இதனைக் கூறினார்.
பொருளாதாரத் தடைகளை மாற்றியமைக்க வொஷிங்டனுக்கு பெப்ரவரி 23 ஆம் திகதி வரை காலக்கெடுவை தெஹ்ரான் நிர்ணயித்துள்ளது. இல்லையெனில், இந்த ஒப்பந்தத்தை மீறுவதற்கு அதன் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கும் என்று ஈரான் கூறுகிறது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரானை அந்த நடவடிக்கையிலிருந்து விலகுமாறு அழைப்பு விடுத்தன.
மேலும் 20 சதவிகிதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் யுரேனியம் உலோகத்தை உற்பத்தி செய்ய தெஹ்ரானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து தங்கள் கவலைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment