எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அரசே பொறுப்பு - சுமந்திரன் சபையில் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அரசே பொறுப்பு - சுமந்திரன் சபையில் தெரிவிப்பு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எனக்கான பாதுகாப்பை நான் கேட்காத போதும் எனக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் இப்போது எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது ஏன் என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், ஏதேனும் சூழ்ச்சிகள் மூலமாக எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை நீக்குவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாக இது இருக்கலாம் என்றார். எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை முன்வைத்தபோதும் இன்றைய காலத்திற்கு இது போதுமானதாக இல்லை. இன்றுள்ள வாழ்கை செலவுடன் நோக்குகையில் இரண்டாயிரம் ரூபாவேனும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றே கருதுகிறேன். எவ்வாறு இருப்பினும் ஆயிரம் ரூபாய் உயர்வு கூட இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் எமது கோரிக்கைகளில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வும் ஒன்றாக முன்வைக்கப்பட்டது. எனினும் தகவலின் திரிபுகளை தவிர்க்கவும், சபையில் பதிவு செய்துகொள்ளும் நோக்கத்திற்காகவும் இந்த 10 கோரிக்கைகளையும் வாசிக்கிறேன்.

இவற்றில், தொடர்ச்சியான நில அபகரிப்பு, இந்து கோவில்களை அப்புறப்படுத்தி அதில் பௌத்த விகாரைகளை அமைத்தலின் மூலம் தமிழர்களின் வரலாற்று பகுதிகளை சிங்கள மயமாக்கல், யுத்தம் நிறைவுற்று 10 வருடங்களுக்கு மேலானாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்குதல் மற்றும் தமிழரின் பிரதேசங்களை பௌதீக ரீதியில் சிங்கள மயமாக்க அரச திணைக்களங்களை விசேடமாக தொல்பொருள் திணைக்களத்தினை உபயோகித்தாலும் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்தலும், மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகம் தொடர்பாக எதிர்க்கும் சிவில் சமுக ஆர்வலர்களையும் அரசு தொடர்ந்தும் இலக்கு வைத்தல், தமிழ் பண்ணையாளர்கள் தமது பசுக்களை கொண்டு செல்லும் மேய்ச்சல் தரையினை சிங்கள பண்ணையாளர்கள் ஆக்கிரமித்தல் மற்றும் பசுக்கள் கொல்லப்படல் போன்ற பிரச்சினைகள், மரித்த தமது உறவுகளை தமிழர்கள் நினைவு கூறும் உரிமை மறுக்கப்படுத்தல். மேலும், கல்லறைகள் மற்றும் நினைவு தூபிகள் என்பன அழிக்கப்படல், கொவிட்- 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம்களின் ஜனாஸா அவர்களது குடும்பத்தின் விருப்புக்கும் சமய நம்பிக்கைக்கு எதிராகவும் வலுக்கட்டாயமாக எரிக்கப்படல், தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் பதியப்படாது 40 வருடங்களுக்கு அதிகமாக தடுப்பில் இருக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் இன்று முஸ்லிம் இளைஞருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றமை, அரசாங்கம் சிங்கள கைதிகளை கிராமமான முறையில் விடுதலை செய்து வருகின்ற போதும் எந்த ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படாமலும், வழக்குகள் விசாரணைகளின்றியும் இருத்தல், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ச்சியாக தமது உறவுகளுக்கான தீர்வினை வேண்டியும் அரசாங்கம் அவர்களுக்கான பதிலினை வழங்காதுள்ளமை, மலையக தோட்ட தொழிலாளர் 1000 ரூபா சம்பள உயர்வினை கோரினாலும் அரசாங்கம் அதற்கு பதில் வழங்காதுள்ளமை என்ற பத்து கோரிக்கைகள் வடகிழக்கு சிவில் சமூக சம்மேளனதின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகளாகும்.

இந்த பேரணியானது சிவில் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எமது கட்சியினாலும் ஆதரிக்கப்பட்டது. இவை நியாயமான கோரிக்கைகளாகவும் நீதிக்கான விடயங்களாகவும் காணப்பட்டதோடு, ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பினை நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோல் இந்த பேரணியானது சமாதானமான முறையில் நடைபெற்றதோடு, வெற்றிகரமாக நிறைவு செய்தனர். எனவே இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வடக்கு கிழக்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென அரசாங்கத்தினை கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் பேரணி முடிந்த கணமே எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது. நான் பேரணியில் பங்குபற்றியதன் விளைவாக அரசாங்கம் என்மீது எரிச்சலடைந்திருக்கலாம். அல்லது, கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விடயங்கள் பொய்யாகவும் அரசு அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதாகவும் இருக்கலாம். அல்லது ஏதேனும் சூழ்சிகள் மூலமாக எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை நீக்குவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாகவும் இருக்கலாம்.

எனவே இந்த விடயங்களால் எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad