சொந்த மண்ணில் இந்தியாவுக்கு ஏமாற்றம் : இங்கிலாந்து 227 ஓட்டங்களால் அபார வெற்றி - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு ஏமாற்றம் : இங்கிலாந்து 227 ஓட்டங்களால் அபார வெற்றி

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 227 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1--0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 218 ஓட்டங்களையும் சிப்ளி 87 ஓட்டங்களையும் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில், பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 337 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 91 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் புஜாரா 73 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், டொம் பெஸ் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் அண்டர்சன், ஜொப்ரா ஆர்செர மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 178 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணிக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரூட் 40 ஓட்டங்களையும் ஒலீ போப் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் நதீம் 2 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 420 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 187 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 72 ஓட்டங்களையும் சுப்மான் கில் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜெக் லீச் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் டோமினிக் பெஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 218 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad