சீனாவின் காலனித்துவ நாடாக அரசாங்கம் இலங்கையை மாற்றி வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது பாரிய ஆபத்தினை இலங்கைக்கு ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக அம்பாறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி குறித்து என்னிடம் வாய்மொழி மூல முறைப்பாட்டினை பொலிஸார் பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், தமிழ் சமூகத்தின் கலை, கலாசார விடயங்கள் மீதான தற்போதைய திட்டமிடல்களை எதிர்த்தும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட உணர்வுடனான உரிமைப் பேரெழுச்சியாகவே இந்தப் போராட்டத்தைப் பார்க்கின்றேன்.
தங்களுடைய பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ விட வேண்டும் என்பதை உணர்வு பூர்வமாக தமிழ் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் குறித்துப் பேசுகின்றனர். ஆனால், சிறுபான்மை சமூகமாகவுள்ள எங்களுக்கு நீதி, சுதந்திரம் கிடைக்கபெறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. எங்கு சென்றாலும் தமிழர்கள் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தொடரும் அரசுகளால் நசுக்கப்படுகின்ற சூழல்தான் இருக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும்.
இந்த நாட்டின் தலைவர் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதை மறந்து பௌத்த மக்களுக்குத்தான் தலைவர் என்ற வகையில் பௌத்த தேரர்களின் சொற்படியே ஆட்சி செய்வேன் என்ற வகையில் ஜனாதிபதி கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அரசியல், அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் வேறுபட்ட சிந்தனையுடன்தான் செயற்படுகின்றனர். நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இந்த அரசாங்கம் எந்த முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை.
தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளில் அரசாங்கம் எந்தவொரு தீர்வை நோக்கியும் நகரவில்லை என்பதை இந்தியா அடிக்கடி சுட்டிக்காட்டுவதால் இப்போது இந்தியாவையும் இலங்கை அரசாங்கம் வஞ்சித்துள்ளது.
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொழும்புத் துறைமுகம், யாழ். தீவகப் பகுதிகளைக் கூட சீன அரசுக்கு தாரை வார்த்திருக்கும் விடயம் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு செல்லும்.
ஏனென்றால், இந்தியா நேச நாடு. யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருந்தாலும் சீனா மிக மோசமான ஆயுதங்களை வழங்கியது.
இப்போது, சீன மொழி பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள்கூட காட்சிப்படுத்தப் படுகின்றன. சீன ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலனித்துவ நாடாக இலங்கை மாறி வருகின்றது. இது பாரிய ஆபத்தினை இலங்கைக்கு ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment