(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுக்கும் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து செயற்பட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்துகொண்டு கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டதைப் போன்று தற்போது செயற்பட முடியாது. அரசியலில் ஒரு அணியாக இணைந்து செயற்படுவது அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
தெவிநுவர பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய காலக்கட்டத்தில் துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கிழக்கு முனையத்தை விற்கும் யோசனைக்கு இடமளிக்கவில்லை இதனால் அவரிடமிருந்து அமைச்சு பதவியை பறித்து துறைமுக அமைச்சு பதவி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டது.
கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு மாத்திரமல்ல ஜப்பானுக்கும் வழங்கும் முயற்சியை கடந்த அரசாங்கமே முன்னெடுத்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கைச்சாத்திட்டார். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியாக செயற்படுகிறார்கள். அன்று அமைதிகாத்து விட்டு இன்று தேசப்பற்றுள்ளோர் போன்று ஊடகங்கள் மத்தியில் கருத்துரைப்பது நகைப்புக்குரியது.
ஸ்ரீ லங்காபொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் பல கட்சிகள் கூட்டணியமைத்துள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒரு பங்காளி கட்சியாக செயற்படுகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுக்கும் தீர்மானத்துக்கு மதிப்பளித்து செயற்பட சுதந்திர கட்சி முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். பங்காளி கட்சியாக இருந்துகொண்டு கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. அரசியல் கூட்டணியமைத்தால் அனைத்து தரப்பினரும் கொள்கை ரீதியிலும் ஒன்றினைந்து பயணிக்க வேண்டும்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விவகாரத்தில் ஜனாதிபதி பாதகமற்ற மற்றும் சாதகமான தீர்மானத்தை எடுப்பார். தேசிய வளங்களை பாதுகாப்பதாக நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை மறந்து அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படாது. அரசியல் நோக்கங்களுக்காக எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யாக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment