வரலாறுகளைத் திரிபுபடுத்துவது மதகுருவின் பண்பல்ல, இப்படியானவர்களை நியமிப்பது இனங்களுக்குள் பகை முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் - துரைரத்தினம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

வரலாறுகளைத் திரிபுபடுத்துவது மதகுருவின் பண்பல்ல, இப்படியானவர்களை நியமிப்பது இனங்களுக்குள் பகை முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் - துரைரத்தினம்

ஜனாதிபதியினால் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலணி உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் புனிதத் தலங்கள் பௌத்த மதத்திற்குரியதெனத் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு கிழக்கில் தமிழர்களே வாழவில்லை எனவும், 99 வீதம் பௌத்த விகாரைகளே இருந்ததாகவும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் புனிதத் தலங்கள் பௌத்த மதத்திற்குரியதாகுமென தமிழர்களின் கலாசார ரீதியான வரலாற்றைத் திரிபுபடுத்திக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இப்படிப்பட்ட ஒருவரை ஜனாதிபதி செயலணியில் நியமித்து இலங்கையில் இனங்களுக்குள் பகை முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு வழி சமைக்கும்.

தமிழர்களை நிம்மதியாக இலங்கையில் வாழ விடாமல் ஒரு பௌத்த மதகுரு தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பது மதகுருவிற்கான பண்பாக இருக்க முடியாது.

பல்லின மதம், பல மொழி, பல கலாசாரத்தைக் கொண்ட இந்நாட்டில் தமிழர்களை ஒரு தேசிய இனம் என்று ஏற்றுக் கொண்டு நிர்வாக ரீதியாக வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியும் அமுலாக்கப்படுவது இப்படிப்பட்ட மதகுருமாருக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் கலாசார பண்பாட்டைப் பிரதிபலிக்கின்ற சான்றுகள் உள்ள இடங்களையே திரிபுபடுத்தி மாற்ற முயற்சிப்பது ஆரோக்கியமான விடயங்களல்ல. 

இவை மட்டுமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபது இடங்களுக்கு மேற்பட்ட புராதான வரலாற்றைக் கொண்ட இடங்களை இராணுவமும் பார்வையிட்டுச் சென்றுள்ளமை நல்ல நோக்கத்திற்கானதல்ல. 

ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில் கூட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பேச்சுக்களே தென்பட்டது.

எனவே, தமிழர்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு தமிழர்களும் இலங்கைப் பிரஜைகளாக சம உரிமையுடன் அதிகாரம் உள்ளவர்களாக வாழ்வதற்கு சர்வதேச ரீதியில் வழிவகுக்க வேண்டும். 

அத்துடன், தமிழர்களின் வரலாற்றைத் திரிபுபடுத்துகின்ற செயற்பாட்டைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment