வழங்கிய வாக்குறுதிகளிற்கமைய வவுனியா வியாபாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

வழங்கிய வாக்குறுதிகளிற்கமைய வவுனியா வியாபாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

வவுனியா மொத்த மரக்கறி வியாபார சந்தையை பொலிஸார் திறக்க விடாதமையினால் வீதியை வழிமறித்து, வியாபாரிகள் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தின ஆகியோர், வியாபாரிகளுக்கு வாக்குறுதி வழங்கியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கொரோனோ தாக்கம் காரணமாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினசந்தை, கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்ததுடன், காமினி மகா வித்தியாலயம் மற்றும் கண்டி வீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் தற்காலிகமாக செயற்பட்டு வந்தது.

இதேவேளை சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிற்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் எவருக்கும் தொற்று அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை மீண்டும் சந்தையை திறப்பதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியிருந்ததுடன் நகர சபையின் ஏற்பாட்டில் நேற்யைய தினம் தினச்சந்தை தொற்று நீக்கமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சந்தையை திறப்பதற்காக வர்த்தகர்கள் வந்த நிலையில் பொலிஸார் அவர்களை சந்தையை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் அவர்களிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

நீண்ட நேரமாகியும் தீர்வு கிடைக்காமையால், கொறவொத்தானை பிரதான வீதியை வழிமறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து 6 மணி நேரமாக இடைநிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லால்செனவிரத்தின ஆகியோர் அவர்களுடன் கலந்துரையாடினர். 

ஏனைய சில ஊழியருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை விரைவாக செய்துவிட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளிற்கமைய போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment