விவசாயத்துக்கான பயிர் விதைகளை இறக்குமதி செய்வதற்காக ஆண்டு தோறும் சுமார் 2000 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறுகிறார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இச்செலவினத்தை படிப்படியாகக் குறைத்து, நாட்டிற்குத் தேவையான 80% சதவீதமான பயிர் விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் வாழ்வாதார அபிவிருத்திக் குழுவின் கண்டி மாவட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயத் துறை, கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி சபை ஆகியன ஒன்றிணைந்து செயற்படாததால் விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் எழுந்ததாகவும், இப்போது இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாக தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
கண்டி மாவட்டத்திற்கு விவசாயத்திற்காக அமைச்சு ரூபா மூவாயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளதாவும் அமைச்சர் குறிப்பிடடார்.
“இதுவரை விவசாய அமைச்சகத்திற்கான தரவுத் தளம் இல்லை. விவசாயம் குறித்த ஒரு தேசியக் கொள்கையை நாங்கள் தற்போது வகுத்துள்ளோம். அதனுடன் ஒரு நல்ல தரவுத் தளத்தை உருவாக்கியுள்ளோம். சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் பல விவசாயிகள் ஒரே மாதிரியான காய்கறிகளை வளர்க்கிறார்கள். ஆகவே இதனைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என அமைச்சர் கூறினார்.
“அறுவடை காலத்தின் போது விவசாயிகள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதாவது 60% அளவில் விலங்குகளினால் சேதம் ஏற்படுகின்றது. அதாவது காட்டு யானைகளை விடவும் கிளிகள், பன்றிகள், அணில்கள் மற்றும் மயில்கள் என்பன பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனைத் தடுப்பதற்கு நாம் தற்பொழுது பல்வேறு காரியங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் இதுவரை எங்களால் ஒரு நிரந்தரத் தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுவரை, ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இது இப்போது ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக இது ஐந்து ஏக்கராக அதிகரிக்கப்பட்டிருந்தது. இதற்காக விரைவில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படும்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
“கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தெனிய, மினிப்பே மற்றும் உடதும்பறை ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் பிரச்சினைகள் இருந்தன. தற்பொழுது இங்கு யானை வேலிகள் அமைத்து வருகிறோம். இனிமேல் கண்டி மாவட்டத்தில் காட்டு யானைகள் பிரச்சினை இருக்காது.
காய்கறிகள் மற்றும் பழ வகைகளை லொறி மூலம் கொண்டு செல்வதால் செலவு ஏற்படுகின்றது. அதனால் அவற்றை ரயிலில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இதனை செயற்படுத்த தனி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன.
விவசாயம் தொடர்பான ஒருங்கிணைந்த திட்டங்கள் மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் ஒவ்வொரு விவசாயப் பகுதியிலும் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய ஏற்றுமதி விவசாயக் கிராமத்தை நிறுவுவோம். பால் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், நெல் வயல்களில் பயிரிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நெல் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உரமானியத்தை ஏனைய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்துவோம். விவசாயத்திற்கான இரசாயனப் பொருட்கள்களின் விலை அதிகமாக இருப்பதனால் அவற்றை விவசாய சேவை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம்.
உள்ளூர் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் 10,000 கால்நடைகளை இறக்குமதி செய்யத் தீர்மானித்துளோம். இந்நடவடிக்கைகளுக்காக ஒரு குழு நியமிக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment