பிரஜாவுரிமையை நீக்கினாலும், சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம் தொடரும் - ஜனாதிபதி நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவினால் விசித்திரமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது : டில்வின் சில்வா - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

பிரஜாவுரிமையை நீக்கினாலும், சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம் தொடரும் - ஜனாதிபதி நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவினால் விசித்திரமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது : டில்வின் சில்வா

(எம்.மனோசித்ரா)

ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் குரலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் முடக்க முடியாது. பிரஜாவுரிமையை நீக்கினாலும் எம்மை சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக ரீதியாக செயற்படுகின்றவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் ஜனாதிபதி நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவினால் விசித்திரமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

எமது குடும்பம் சார்ந்த மோசடிகளில் யாரும் தலையிடாதீர்கள் என்று எச்சரிக்கும் வகையிலேயே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான எமது குரலை முடக்குவதற்கு முயற்சித்தால் வாழ்நாளின் இறுதி வரை அதனை எதிர்த்து போராட நாம் தயாராகவுள்ளோம் என ஜனாதிபதியிடம் கூறிக் கொள்கின்றோம்.

எமது குரலை ஒடுக்கும் போராட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷவால் வெற்றி பெற முடியாது. அவரை நாம் தோற்கடிப்போம். பிரஜா உரிமையை நீக்கினாலும் எமது போராட்டம் தொடரும். 

ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் பிரஜாவுரிமை எமக்கு பெரிதல்ல. 1983 இல் ஜே.ஆர்.ஜயவர்தன மக்கள் விடுதலை முன்னணியின் பிரஜாவுரிமையை நீக்கினார். ஆனால் எமது செயற்பாடுகளை அவராலும் முடக்க முடியவில்லை.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 22 பேரின் பிரஜாவுரிமையை நீக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வேறு என்ன செய்வதென்று புரியாமல் இவ்வாறு செய்ய முற்படுகின்றார். அவருக்கு நாட்டை நிர்வகிக்க தெரியவில்லை. தமது இயலாமையை அவர்கள் புரிந்து கொள்ளும் போது, உண்மையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகளின் குரலை முடக்க முயற்சிக்கிறார்கள்.

ஜனநாயக போராட்டத்தில் ராஜபக்ஷாக்களின் 69 இலட்சம் வாக்குகளா அல்லது மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தியின் கூட்டு பலமா வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிரஜாவுரிமையை நீக்கியல்ல, சிறையிலடைத்தாலும் ஜனநாயகத்திற்கான எமது குரலை முடக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment