உல்லாச பயணிகளால் வனப் பகுதிக்கு சேதம் - சிறிய உலக முடிவு, நாராங்கலை மலைப் பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்க தடை - News View

About Us

About Us

Breaking

Thursday, February 25, 2021

உல்லாச பயணிகளால் வனப் பகுதிக்கு சேதம் - சிறிய உலக முடிவு, நாராங்கலை மலைப் பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்க தடை

மடுல்சீமைப் பகுதியின் சிறிய உலக முடிவு மலைப் பகுதியிலும், பதுளை - நாராங்கலை மலை உச்சிப் பகுதிகளிலும் உல்லாசப் பயணிகள் செல்வதற்கும், கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் கூட்டம், பதுளை அரச செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, இணைப்புக் குழுத் தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.

இணைப்புக் குழுத் தலைவர் சுதர்சன தெனிபிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 6ஆம் திகதி தினுர விஜயசுதந்தர என்ற ஊடகவியலாளர், சிறிய உலக முடிவைப் பார்க்கச் சென்று, 1200 அடி பள்ளத்தில் விழுந்து பலியானார். இவர் தனது நண்பர்கள் 12 பேருடன் மலை உச்சிக்கு சென்று கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். கடுங்குளிரான காலநிலையினால், அவர்களுக்கு மலை உச்சியில் இருக்க முடியாமல் கீழிறங்கினர். அவ் வேளையில் 1200 அடி பள்ளத்தாக்கில் தினுர விஜயசுந்தர விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட முடிவிற்கமைய உல்லாசப் பயணிகள் எவரும், சிறிய உலக முடிவு மலைப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருப்பதற்கு பூரண தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தகைய கூடாரங்கள் அமைத்து உல்லாசப் பயணிகள் தங்குவதால், அப்பகுதியெங்கும் சூழலும் மாசடைகின்றன.

அத்துடன், பதுளை - நாராங்கலை மலைப் பகுதிக்கு உல்லாசப் பயணிகள் செல்வதற்கும், கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. நாராங்கலை மலைப் பகுதியில் 64 வகையிலான மரங்கள், 24 வகையிலான செடி, கொடிகள், 22 இற்கு மேற்பட்ட மூலிகை வகைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், உல்லாசப் பயணிகளாக, மலையுச்சிக்கு செல்வோர், வனப் பகுதிக்கு சேதம் விளைவிப்பதுடன், அங்குள்ள அமைதியான சூழலையும் மாசடைய செய்கின்றனர். வரலாற்றுப் பெருமை கொண்ட மலைப் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய பாரிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், நாராங்கலை மலை உச்சியிலிருந்து 142 நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன.

இந்நீரூற்றுக்களிலிருந்து வெளியேறும் நீர், மொரகொல்ல ஓயா, அம்பகா ஓயா, பதுளை ஓயா, உமா ஓயா ஆகிய ஆறுகளுடன் சங்கமமாகின்றன.

பல்கலைக்கழகப் பேராசிரியர் குழுவினர், சூழலியலாளர்கள் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து மேற்கண்ட விடயங்கள் தெரிய வந்துள்ளன.

ஊவா மாகாண சுற்றுலா துறை அமைச்சு, உல்லாசப் பயணிகள் சபை ஆகியவற்றின் அனுசரணைகளுடன், இரு மலைப் பகுதிகளையும் பராமரிக்கவும், பாதுகாப்பு அரண்கள் அமைக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுத் தலைவர் சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.

பதுளை விசேட நிருபர்

No comments:

Post a Comment