பெருந்தோட்ட நிறுவனங்கள் நினைத்தால் போல் ஆட முடியாது, தொழிற்சங்கங்கள் விட்டுக் கொடுப்புடன் செல்ல வேண்டும், எதிர்கட்சிகள் விமர்சிப்பதில் நியாயமில்லை என்கிறார் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

பெருந்தோட்ட நிறுவனங்கள் நினைத்தால் போல் ஆட முடியாது, தொழிற்சங்கங்கள் விட்டுக் கொடுப்புடன் செல்ல வேண்டும், எதிர்கட்சிகள் விமர்சிப்பதில் நியாயமில்லை என்கிறார் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறித்து நிபந்தனைகள் விதிக்க பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. இந்த விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் நினைத்தால் போல் ஆட முடியாது, பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை கொடுக்க முடியாது போனால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா  தெரிவித்தார்.

அரச நிருவாகத்தின் கீழுள்ள தோட்டங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்து அரசாங்கத்தின் திறன் என்ன என்பதை வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தமொன்று உள்ளது. இது பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையில் கைச்சாத்திடும் ஒப்பந்தமாகும். இறுதியாக செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரைக்கும் நடைமுறையில் உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில் அரசாங்கம் தலையிட்டு பலவந்தப்படுத்தி எதனையும் செய்ய முடியாது.

பாராளுமன்றத்தில் அழுத்தங்களை பிரயோகித்து செய்யக்கூடிய ஒப்பந்தமும் அல்ல. இது பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைங்கி செய்ய வேண்டிய ஒப்பந்தமாகும். எனவே அரசாங்கம் இதில் ஏதேனும் மாற்று வழிமுறையை கையாள்வதாயின் கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னரே தலையிட முடியும்.

எனினும் இந்த பிரச்சினையில் 12 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டு ஒப்பந்தத்திற்குள்ளேயே தீர்வுகளை எட்டும் இணைக்கப்பாட்டு முயற்சிகளை கையாண்டோம். எனினும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் இணக்கம் எட்டாத வரையில் அரசாங்கத்தினால் தீர்ப்பு ஒன்றினை வழக்க முடியாது. அதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது. 

இந்த விடயத்தில் எமக்கு இருந்த ஒரே மாற்று வழிமுறை சம்பள நிர்ணய சபையில் இந்த விடயத்தை பேசி குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதேயாகும். இதனை எதிர்கட்சிகள் விமர்சிப்பதில் என்ன நியாயம் உள்ளது. குதிரையை குளக்கரைக்கு கூட்டிச் செல்ல முடியும், ஆனால் குதிரைக்கு தண்ணீரை பருக்க முடியாதே. எனவே எமக்குள்ள ஒரே தீர்வு என்னவோ அதனையே நாம் செய்துள்ளோம்.

அதுமட்டுமல்ல எக்காரணம் கொண்டும் தொழிலாளர்களின் சலுகைகளை பெருந்தோட்ட நிறுவனங்கள் பரிக்குமானால் அதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. அப்படி நடக்குமாயின் அதற்கு எதிரான சட்டங்களை கொண்டுவந்து தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்துக் கொடுக்கவும் எம்மால் முடியும்.

தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறித்து நிபந்தனைகள் விதிக்க பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. சம்பள நிர்ணய சபை வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அத்துடன் அரசாங்கத்தின் நிருவாகத்தில் கீழுள்ள தோட்ட ஊழியர்களுக்கு திறைசேரி நிதியிலாவது சம்பளம் கொடுப்போம்.

முதலில் அரச நிருவாகத்தின் கீழுள்ள பெருந்தோட்டங்களின் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கத்தின் திறனை காட்டுவோம், அதேபோல் தனியார் துறை நிறுவனங்களும் இந்த கொடுப்பனவை வழங்கியாக வேண்டும்.

அவ்வாறு ஆயிரம் ரூபா கொடுக்க முடியாது போனால் தயவுசெய்து தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள் என பிரசித்தியான அறிவிப்பையும் நாம் விடுத்துள்ளோம். பெருந்தோட்ட நிறுவனங்கள் நினைத்தால் போல் ஆட முடியாது. தொழிலாளர் உரிமையை பாதுகாப்பதே எமது நிலைப்பாடாகும். ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டால் அதற்கும் முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவே உள்ளது.

ஆனால் தொழிற்சங்கங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், பெருந்தோட்டங்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் வாழ முடியும். எனவே தொழிற்சங்கங்கள் முழுமையான சலுகைகளை எதிர்பார்க்க வேண்டாம். இணக்கத்துடன் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியதும் அவசியம்.

வெறுமனே கொடுப்பனவுகள் மட்டும் அல்லாது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், கல்வி, சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனையும் அரசாங்கம் செய்து முடிக்கும் என்றார்.

No comments:

Post a Comment