சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத் தலைவரானார் பொப் ரே : இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத் தலைவரானார் பொப் ரே : இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி

(ஆர்.ராம்)

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத் தலைவராக கனடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின் முதல்வராகவும் செயற்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுலை ஆறாம் திகதி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்திர வதிவிடப்பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரொரொண்டோவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொப் ரே 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பட்டிருந்தார். அப்போதைய அரசாங்கம் இவரை நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதித்திருக்கவில்லை.

அப்போது இவருடைய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைச் செய்துவிட்டு 15 நிமிடங்களின் பின்னர் அவரை நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறியதாக இவர் அப்போது தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுதாபம், ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை மறுக்கும் ஆவணமொன்றில் கையொப்பமிடுமாறு வலியுறுத்தியதாகும் அவர் அப்போது கூறியிருந்தார்.

மேலும், அதன் பின்னரான பல தருணங்களில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் அதீத கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கை அரசாங்கத்திற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

ஏனெனில், பாதிக்கப்பட்ட தரப்பும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்களும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீளப் பெற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பிலான எழுத்து மூலமான ஆவணத்தினையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை விவகாரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்போது, இலங்கை விவகாரங்கள் தொடர்பில் நன்கறிந்தவரான பொப் ரே போன்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை அளிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனைவிடவும் இவர் 2017 இல் ரோஹிங்கிய முஸ்லிம்களின் சுத்திகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக கனடிய பிரதமரினால் விசேட பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டு செயற்பட்டிருந்தமையால் இன சுத்திகரிப்பு, போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான கூடிய அவதானமும் அனுபவமும் இவருக்கு காணப்படுகின்றது.

இதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்குத் தொடுநராக சர்வதேச குற்றங்கள், மனித உரிமைகள் விடயங்களில் நிபுணத்துவம் வாய்ந்த இராணி சட்டத்தரணி கரீம் அகமட் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் விசேட விசாரணைக்குழுவிற்கான தலைமை ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad