கட்சிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை விட கட்சிகளுக்குள்ளேயே அதிகளவான முரண்பாடுகள் - நல்லாட்சியில் முன்னெடுத்த அபிவிருத்திகளை ஊடகங்களில் விளம்பரப்படுத்தவில்லை : சாகல ரத்நாயக்க - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

கட்சிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை விட கட்சிகளுக்குள்ளேயே அதிகளவான முரண்பாடுகள் - நல்லாட்சியில் முன்னெடுத்த அபிவிருத்திகளை ஊடகங்களில் விளம்பரப்படுத்தவில்லை : சாகல ரத்நாயக்க

(நா.தனுஜா)

நாட்டில் தற்போது கட்சிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை விடவும் கட்சிகளுக்குள்ளேயே அதிகளவான முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை இல்லாமல் செய்து, அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் ஊடாகவே நாட்டிற்கு முழுமையான செயற்திறனுடன் கூடிய சேவையை வழங்கமுடியும். அந்த மாற்றம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவாகிவருகின்றது என்று அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் தமது ஆதரவாளர்களைத் தெளிவூட்டும் வகையிலான பொதுக்கூட்டம் நேற்று மாத்தறை மொறவக்க பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது எமது நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. கருத்துச் சுதந்திரத்தை உறுதிசெய்ததுடன் மாத்திரமன்றி, சர்வதேசத்துடன் சுமுகமான தொடர்புகளைப்பேணி அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினோம். அதன் மூலம் அபிவிருத்தியை ஏற்படுத்தி, நாட்டு மக்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தோம். 

கடந்த 2000 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். எனினும் அவ்விரு சந்தர்ப்பங்களிலும் எம்மால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல்போனது.

2015 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க தரப்பிற்கு 42 பாராளுமன்ற ஆசனங்களே இருந்தன. அதனைக்கொண்டுதான் அவர் பொருட்களில் விலைகளைக் குறைத்தார். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 

நாட்டின் பல பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. 'சுவசரிய' இலவச அம்யூலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாம் அபிவிருத்தியை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

எனினும், இன்றளவிலே அரசியல் என்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலையொன்றை எட்டயுள்ளது. தற்போது கட்சிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை விடவும் கட்சிகளுக்குள்ளேயே அதிகளவான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அந்த முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இல்லாமல் செய்து, நாமனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றும்போதுதான் நாட்டிற்கு முழுமையான செயற்திறனுடன் கூடிய சேவையை வழங்க முடியும். அந்த மாற்றம் தற்போது எமது கட்சிக்குள் உருவாகி வருகின்றது.

கடந்த காலங்களில் நாம் பிளவுபட்டிருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்றத்தில் குறைந்தளவான ஆசனங்களையே கைப்பற்ற முடிந்தது.

கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் அவர்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் விளைவாகவே நாடு தற்போதைய நிலையை அடைந்திருக்கிறது. அவருடைய காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுப்படுத்தப்பட்டதுடன் விசேடமாக சாதாரண மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டன. 

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைளை நாம் சாதாரண மக்களுக்கு எடுத்துக்கூறவில்லை. ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தவில்லை. எனினும் எப்போதும் ஒரு வீழ்ச்சிக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே மீண்டும் நாட்டிற்கு சக்தியை வழங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad