அந்தமான் கடலில் நிர்க்கதியான ரொஹிங்கிய அகதிப்படகு மீட்பு - எட்டுப் பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

அந்தமான் கடலில் நிர்க்கதியான ரொஹிங்கிய அகதிப்படகு மீட்பு - எட்டுப் பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்

இந்தியாவின் கடலோரக் காவல் அதிகாரிகள், அந்தமான் கடற்கரை அருகே நிர்க்கதியான ரொஹிங்கிய அகதிகளை ஏற்றிய படகை கண்டுபிடித்துள்ளனர். அந்தப் படகில் 8 பேர் உயிரிழந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மாதம் 11ஆம் திகதி 90 பேருடன் அந்தப் படகு பங்களாதேஷின் கொக்ஸ் பசார் முகாமிலிருந்து புறப்பட்டதாக தெரிகிறது. அதில் 23 பிள்ளைகளும் இருந்தனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

மீட்பாளர்கள் அந்தப் படகை அடையும்போது படகின் எஞ்சின் செயலிழந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் உணவு மற்றும் குடிநீர் தீர்ந்து பலரும் சுகவீனமுற்ற சூழலிலேயே காணப்பட்டுள்ளனர்.

படகில் உயிருடன் இருந்த 80 க்கும் அதிகமானோருக்கு உணவு, நீர், மருத்துவப் பராமரிப்பு போன்றவை வழங்கப்பட்டன.

அகதிகளில் ஒருவரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டது. இரண்டு இந்தியக் கடலோரக் காவல்துறைக் கப்பல்கள் உதவிக்கு அனுப்பப்பட்டன.

அகதிகள் பாதுகாப்பாக நாடு திரும்புவது குறித்து பங்களாதேஷுடன் இந்திய அரசாங்கம் பேச்சு நடத்துவதாக ஸ்ரீவஸ்தவா கூறினார். 

எனினும் கொக்ஸ் பசார் முகாமில் இருந்து எவரும் வெளியேறியதாக தெரியவில்லை என்று பங்களாதேஷ் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை கூறி இருந்தது.

கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 47 பேரிடம், அகதிகளுக்கான ஐ.நா தூதரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டைகள் இருந்ததாக அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டு மியன்மாரின் இராணுவ நடவடிக்கையை அடுத்தே ஆயிரக்கணக்கான ரொஹிங்கியர்கள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.

No comments:

Post a Comment