சம்பந்தனின் இடத்தை பிடிக்கும் சூழ்ச்சிக்கு மட்டு. மாவட்ட மக்கள் சோரம் போக மாட்டார்கள் - சந்திரகாந்தன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

சம்பந்தனின் இடத்தை பிடிக்கும் சூழ்ச்சிக்கு மட்டு. மாவட்ட மக்கள் சோரம் போக மாட்டார்கள் - சந்திரகாந்தன்

சம்பந்தனின் இடத்தை பிடிப்பதற்கு செய்யும் சூழ்ச்சியில் மட்டு. மாவட்ட தமிழ் மக்கள் சோரம் போகமட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 குளங்களும் 6 அணைக்கட்டுகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிகழ்வுகள் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவெட்டுவான் அணைக்கட்டு புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு அணைக்கட்டிற்கான அடிக்கலை நட்டு வைத்ததுடன், பெயர்ப் பலகையினையும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இவ்வணைக்கட்டினை அமைப்பதனூடாக சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு சிறுபோகத்திற்கான நீர்ப்பாசனத்தினை வழங்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் பொறியியலாளர் என். நாகரத்தினம், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலித் தேசியவாதிகள், வேடதாரிகள் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வருகை தந்து குசும்புகளை காட்ட முனைகின்றார்கள். நான் எட்டு அல்லது ஒன்பது தடவைகள் முல்லைத்தீவிலிருந்து கால் கொப்பளித்து யானைத் தடங்களில் சறுக்கி விழுந்து நடந்து கொக்கிளாய் ஆற்றில் சுரிக்குள் புதையுண்டு செம்மலை சென்று யாழ்ப்பாணத்தில் நான் போராடினேன்.

அப்போது கிடைக்காத சுதந்திரம், சுமந்திரன் பொத்துவிலில் இறங்கியும், கல்முனையில் இறங்கியும், மட்டக்களப்பில் இறங்கியும் நடந்த ஐந்து நாட்களில் யாழ்ப்பாணம் சென்றால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியான விடயமாகும்.

இது சம்பந்தனின் இடத்தை பிடிப்பதற்கு செய்யும் சூழ்ச்சியாகும். இவற்றில் எந்தவொரு தமிழனும் சிக்குண்டிராமல் தெளிவான சிந்தனையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

வெல்லாவெளி, பெரியபோரதீவு நிருபர்கள்

No comments:

Post a Comment