(நா.தனுஜா)
சீனா சுமார் 30 - 35 வருட காலத்திற்குள் 700 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றது என்றும் இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பொருளாதார செயற்திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை சீனா கையாளும் முறை தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் உரையாடியதாகவும் கூறினார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நேற்று புதன்கிழமை ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டார்.
மேலும் இம்மாநாட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பாகிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் அப்துல் ரஸாக், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமட் ஷாட் கட்டாக் ஆகியோரும் இலங்கை மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வர்த்தக சமூகத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேலும் கூறியதாவது எமது நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே நான் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்குத் தூண்டுகோளாக அமைந்திருந்தது. தற்போது பொருட்களின் விலையுயர்வு என்பது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் விவசாயிகள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான செலவும், அவற்றை முடிவுப் பொருளாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கான செலவும் பாரியளவில் வேறுபடுகின்றது.
அந்த வேறுபாட்டைக் குறைப்பதற்கான நுட்பத்தை சீனா கண்டறிந்திருப்பதுடன், அந்நாட்டு ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போது அதனைக் கேட்டறிந்து அமுல்படுத்தினேன்.
அதேவேளை சீனா சுமார் 30 - 35 வருட காலத்திற்குள் 700 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.
முதலில் நாடுகள் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் ஊடாக வளங்களையும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். பின்னர் அதனைக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அதனையே சீனா செய்தது. இவை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் நேற்றையதினம் நீண்ட நேரம் கலந்துரையாடினேன்.
மேலும் அரசியல் உறுதிப்பாட்டைப் பேணுவதுடன் அயல் நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதிலும் அவதானம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் இலங்கையும் பாகிஸ்தானும் பயங்கரவாத செயற்பாடுகளினால் பொருளாதார ரீதியில் எதிர்மறையான தாக்கங்களுக்கு முகங்கொடுத்தது.
குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டன. உண்மையில் நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இது குறித்து நான் இந்தியப் பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலின்போதும் கூறினேன்.
பொதுவாக நாடுகள் வறுமையின் பிடியிலிருந்து வெளிவருவதற்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் அவதானம் செலுத்துவதே ஒரே வழியாகும்.
அமெரிக்கா அல்கைதா இயக்கத்தை அழிக்க முற்பட்டது. எனினும் அதனைத் தொடர்ந்து ஐ.எஸ் அமைப்பு தோற்றம் பெற்றது. இத்தகைய பதற்றங்கள் தணிக்கப்படுவதுடன் மனிதாபிமான அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்நிற்க வேண்டும்.
இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நீண்ட கால நல்லுறவை வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் ஊடாக மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
அத்தோடு சீனாவின் ஒரு பாதை - ஒரு மண்டலம் செயற்திட்டத்தின் கீழான சீன - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டத்தில் இலங்கையின் வர்த்தக சமூகம் அதன் பங்களிப்பினை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment