அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பவர்கள் அரசின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் - இன்று வங்குரோத்து எதிர்க்கட்சியே உள்ளது என்கிறார் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பவர்கள் அரசின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் - இன்று வங்குரோத்து எதிர்க்கட்சியே உள்ளது என்கிறார் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பவர்கள் அரசின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்குப் புறம்பான விடயங்கள் சிந்தனைகள் இருந்தால் அவர்கள் அதனை நீக்கிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்கள் இடையே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற குழப்பம் மற்றும் முரண்பாடுகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன மேலும் தெரிவிக்கையில், மஹிந்த சூறாவளி என்ற தொனிப்பொருளில்தான் எமது கூட்டு எதிரணி அமைக்கப்பட்டு ஆட்சியும் அமைக்கப்பட்டது. அந்த மஹிந்த சூறாவளி என்பதை எவராலும் விற்பனை செய்து உண்டழிக்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது.

இது மக்களின் வேலைத்திட்டம். இதற்காக கூட்டாக உழைத்தவர்கள் இருந்தாலும் அதன் உரிமை கோரலை முழுமையாக கேட்க முடியாது. அதன் உரிமையாளர் மஹிந்த ராஜபக்ச அவர்கள்தான். இதனூடாகவே உள்ளூராட்சிகள் தேர்தல் வெற்றி. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உருவாக்கம். கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடத்திற்குள் தேர்தல் வெற்றி பதிவாகியது. 

பின்னர் ஏற்பட்ட கூட்டணியில் பலரும் இணைந்தார்கள். ஜனாதிபதியையும் தெரிவு செய்ய முடிந்தது. பொதுத் தேர்தலிலும் 127 உறுப்பினர்களை பொதுஜன முன்னணி வெற்றி பெற வைத்தது. மேலும் பலர் கூட்டணியில் இருக்கின்றார்கள். 

அதேபோல அமைச்சரவையில் பேசப்படுகின்ற விடயங்களை பாதுகாப்பது அமைச்சர்களின் கடமையாகும். அந்த வகையில் அரசாங்கத்தில் இருப்பவர்கள் அரசின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்குப் புறம்பான விடயங்கள் சிந்தனைகள் இருந்தால் அவர்கள் அதனை நீக்கிக் கொள்ள வேண்டும்.

இன்று வங்குரோத்து எதிர்க்கட்சியே உள்ளது. நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் இரண்டையுமே தவறு என்கிறார்கள். எதிர்க்கட்சி என்பது சம்பிரதாய செயற்பாடுகளன்றி நாட்டிற்காக பொதுவாக ஒன்று சேர வேண்டும். 

வரலாற்றுகளில்கூட 30 வருட போர்க் காலத்திலும் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் அரசாங்கத்தின் கால்களைப்பிடித்து இழுக்கவே பார்த்தார்கள். தொப்பிகல மீட்பின் போதும், கிளிநொச்சி மீட்பின் போதும் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலரும் ஏளனமாகவே விமர்சித்தார்கள். 

எனினும் அன்று இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷச அவர்கள் பாதுகாப்பு செயலாளராகவும் மற்றும் படையினரும் தடைகளுக்கு மத்தியில்தான் வெற்றியை பிடித்தோம். 

கொரோனா இன்று பல நாடுகளிலும் இருக்கிறது. எமது நாட்டில் தொற்றினை வைத்து ஆட்சியைக் கைப்பற்ற பார்க்கின்றார்கள். எவ்வாறாயினும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும்படியே எதிரணியிடமும் கேட்கின்றோம். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன. இதனிடையே அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. 

அதேபோல மக்களுக்கு நிவாரணம் வழங்கி, நாட்டினை அபிவிருத்தி செய்துவிட்டே எதிர்க்கட்சிக்கு சென்றதாக அவர்கள் நினைக்கின்றார்கள். இருப்பினும் எமது அரசாங்கம் பல அபிவிருத்திகளை செய்தது. 

இப்போதும் விவசாயிகளுக்காக குளங்களை நிர்மாணிக்கிறது, 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, விவசாய விலை நிர்ணயம், ஒரு இலட்சம் வீதிகள் செப்பனிடல், உள்நாட்டு உற்பத்தி போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. 

அன்று ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில்போன்று உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியிடையே பலரும் இன்று அதிருப்தியடைந்துள்ளனர். இப்படியே அவர்கள் பயணித்தால் மேலும் பல தோல்விகள்தான் அவர்களுக்கு மிஞ்சும் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad