முறைக்கேடான அதிபரை மாற்றுங்கள் - பாடசாலையின் பிரதான வாயிலை மூடி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்! - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

முறைக்கேடான அதிபரை மாற்றுங்கள் - பாடசாலையின் பிரதான வாயிலை மூடி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா - செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (திங்கட்கிழமை) காலை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர், யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக மாகாண கல்வித் திணைக்களத்தால் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்று அவர் கடமைகளை பொறுப்பேற்கவிருந்த நிலையில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாவது, “தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர், எமது பாடசாலையில் ஏற்கனவே அதிபராக பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன் பாடசாலையில் பல்வேறு முறைக்கேடான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. 

எனவே குறித்த அதிபரை மீண்டும் எமது பாடசாலைக்கு நியமித்து பாடசாலையின் அபிவிருத்தியில் வீழ்ச்சியை ஏற்ப்படுத்த வேண்டாம். ஆகவே இவருக்கு பதிலாக வேறு ஒரு அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாடசாலையின் பிரதான வாயிலை மூடி, எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பொலிஸார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் அவர்கள் தமது கோரிக்கையில் உறுதியாக நின்றனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் இது தொடர்பாக கலந்துரையாடி ஒரு தீர்விற்கு வரலாம் என தெரிவித்ததுடன், பாடசாலை வாயிலை திறக்குமாறு கோரியிருந்தார். பின்னர் பாடசாலை வாயில் திறக்கப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேச்சுவார்த்தையின் பிரகாரம் அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கல்வி செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியது.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த வலயக் கல்வி பணிப்பாளர், கிராம மக்கள் மற்றும் பெற்றோர்களது கோரிக்கைக்கமைய குறித்த அதிபருக்கு பதிலாக வேறு ஒரு அதிபரை இப்பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக அவர்களிற்கு உறுதியளித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment